அறிவியலின் பெரு வளர்ச்சியால் புவியில் அதிதிறன் வாய்ந்த உயிரினமாக, மனிதகுலம் இருந்தாலும் எண்ணற்ற கேள்விகளுக்கு இன்னும் நம்மிடம் பதில் இல்லை என்பதே உண்மை. அவ்வப்போது நிகழும் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. அந்த வகையில் தான் என்ன காரணமென்றே தெரியாமல், நூற்றுக்கணக்கான ஆடுகள் தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் வட்டமடித்த சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.
ஆட்டுத் தொழுவம்:
அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மங்கோலியாவில் அமைந்துள்ள ஒரு ஆட்டு தொழுவத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு மொத்தம் 35 ஆட்டு தொழுவங்கள் இருந்தாலும், 13ம் எண் தொழுவத்தில் உள்ள ஆடுகள் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இடைவிடமால் ஒரே இடத்தை சுற்றி வட்டமடித்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்களில் இரவு பகல் பாராமால் பல்வேறு ஆடுகள் தொடர்ந்து ஒரே இடத்தை பெரிய வட்ட வடிவில் சுற்றியுள்ளன. ஒரு சில ஆடுகள் கூட்டத்தை விட்டு வெளியே சென்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தாலும், ஏராளமான ஆடுகள் இடைவிடாது சுற்றியுள்ளன.
இதுதொடர்பாக பேசிய தொழுவத்தின் உரிமையாளர், கடந்த 4ம் தேதி முதலில் ஒரு சில ஆடுகள் இவ்வாறு சுற்றத் தொடங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து பிற ஆடுகளும் சேர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 12 நாட்கள் ஆடுகள் இவ்வாறு வட்டமடித்ததாகவும், ஆடுகள் அனைத்தும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆடுகளின் விசித்திரமான செயல்பாட்டுக்கு காரணம் என்ன என்று பலரும் குழம்பி வருகின்றனர். சிலர் இது வேற்றுகிரக வாசிகளின் செயலாக இருக்கலாம் என்றும், மேலும் சிலர் இது ஒரு அமானுஷ்ய நிகழ்வு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காரணம் என்ன..?
அதே சமயம் ஆடுகளின் இந்த விநோத நடவடிக்கைக்கு "லிஸ்டீரொயோசிஸ்" என்ற பாக்டீரியா நோய் தொற்று தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாக்டீரியா ஆடுகளின் மூளையின் ஒரு பகுதியை தாக்குவதால், அவற்றிற்கு பசியின்மை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுடன் மூளையின் பாதிக்கப்பட்ட பக்கத்தை நோக்கி வட்டமிடும் இயல்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. தரம் குறைந்த அல்லது கெட்டுப்போன தீவனங்களை உண்பதால் ஆடுகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. லிஸ்டீரொயோசிஸ் தொற்றின் அறிகுறிகள் தெரிந்தால் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆடுகள் உயிரிழந்து விடும் எனவும், இதில் அமானுஷ்யம் என்று எதுவும் இல்லை எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.