பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் உள்ள குலிஸ்தான்-இ-ஜவுஹர் பகுதியில் தனது கால்சட்டையை கழற்றிவிட்டு நிர்வாணமான இளைஞன், ஒரு இளம் பெண்ணைத் துன்புறுத்தி முயற்சிக்கும் வீடியோ புதன்கிழமை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, அனைத்து தரப்பு மக்களிடமும் கண்டனங்களைப் பெற்றது.
நிர்வாணமாக சென்று பெண்ணை தாக்கிய வாலிபர்
தகவல்களின்படி, குலிஸ்தான்-இ-ஜௌஹரின் பிளாக் 4 இல் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியில் வந்து தனது பைக்கை நிறுத்தும் ஒரு நபர், ஒரு வீட்டின் முன் தனது ஷார்ட்ஸை கழற்றிவிட்டு, பட்டப்பகலில் ஒரு பெண்ணை தாக்க முயற்சிப்பதை விடியோவில் காண முடிகிறது. அந்த கொடூர நபர், அந்த பெண் நெருங்கி வருவதற்காகக் காத்திருந்தபோதே, அவரை நோக்கி அநாகரீகமாக சைகை காட்டுவதும் தெரிகிறது. அதோடு அவர் அருகில் வந்தவுடன், அவரைப் பிடிக்கும் முயற்சியில் பின்னால் இருந்து துரத்தி தொடுவதற்கு முயல்கிறான்.
திருப்பி அடித்த பெண்
ஆனால், துணிச்சலான அந்த பெண் தன்னைத் தற்காத்துக் கொண்டு திருப்பி அடிக்கிறார். இதனால் அஞ்சிய அந்த நபர் பின்வாங்குகிறான். உடனடியாக அவன் தனது ஷார்ட்ஸை வேகமாக அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் செல்வதுவரை வீடியோவில் பதிவாகியுள்ளது.
யாரும் புகாரளிக்கவில்லை
இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் கூறும் போது, சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. இருந்தாலும், இந்த சம்பவம் நிகழ்ந்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளதால், இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் குற்றவாளியை பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி
சமூக ஊடகங்களில் வீடியோவைப் பதிவேற்றிய நபரிடம் இருந்து தகவல்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், துன்புறுத்தல் நடந்த இடத்தை ஒரு போலீஸ் குழு பார்வையிட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையில், சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி ஷா, இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்வதை உறுதிசெய்து சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) மற்றும் கூடுதல் ஐஜி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்குறிய நபரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிந்து காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.