அமெரிக்காவில் 4 வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.


அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பள்ளிகள் முதல் பொது இடங்கள் வரை அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்கா சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் அங்கு நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சுதந்திர தினம் என்றால் அமெரிக்காவில் மக்கள் ஒன்று திரண்டு, வானவேடிக்கை, கொண்டாடங்கள் என உற்சாகமாக கொண்டாடுவார்கள்.


ஆனால் இந்த ஆண்டு அது தலை கீழாக மாறியுள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்க சுதந்திர தின விடுமுறையின் போது நான்கு இடங்களில்  நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிலடெல்பியா, டெக்சாஸ், வால்டிபொர், பொர்ட் ஒர்த் ஆகிய 4 நகரங்களில் திங்கள்கிழமை முதல் வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர், 40 க்கும் அதிகமானோர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்க காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.


பொர்ட் ஒர்த் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், மக்கள் திரண்டு ஒன்றாக இருந்த இடத்தில் அடையாளம் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க சற்று தாமதமானது என தெரிவித்துள்ளனர்.


மேலும் இது தனி நபரின் செயலா அல்லது வேறு எதேனும் கூட்டத்தின் செய்லபாடா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.