ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் அந்நாட்டின் முக்கிய இமாம் உள்பட 50 பேர் உயிரிழந்தனர்.


ஆப்கான் தலைநகர் காபூலின் கைர்கானே பகுதியில் உள்ள சித்திக்யா மசூதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முக்கிய இமாம்களுள் ஒருவரான மௌலவி அமீர் முகமது காபூலி உள்பட குறைந்தது 50 வழிபாட்டாளர்கள் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 






மேலும் முன்னதாக 5 குழந்தைகள் உள்பட 27 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






 

உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பஞ்சஷிர் மற்றும் வடக்கு ஆப்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.


முந்தைய குண்டுவெடிப்பு சம்பவங்கள்


முன்னதாக கடந்த மாதம் 29ஆம் தேதி காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.


ஷ்பகீசா டி20 கிரிக்கெட் லீக் எனும் கிரிக்கெட் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், போட்டியின் போது  குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.


 






இந்த குண்டுவெடிப்பு தற்கொலைப் படை தாக்குதல் எனக் கூறப்பட்ட நிலையில்,  பார்வையாளர்களில் 4 பேர் இதில் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதேபோல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காபூலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இஸ்லாமிய சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஷியா சமூகத்தினர் அடிக்கடி ஒன்றுகூடும் இடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண