Julian Assange Is Free: குற்றச்சாட்டுகளை ஒப்புக்ககொள்ள இருப்பதை தொடர்ந்து, 1901 நாட்களுக்குப் பிறகு ஜுலியன் அசாஞ்சே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜுலியன் அசாஞ்சே விடுதலை:
பல்வேறு அரசாங்கங்களின் ரகசியங்களை வெளியிட்டதாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக வெளியான நீதிமன்ற ஆவணங்களின்படி, ”தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்சே ஒப்புக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். தொடர்ந்து இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அங்கே அவர் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்ள இருக்கிறார். இவர் வெளியிட்ட ஆவணங்கள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வந்த 1901 நாட்கள் சிறைவாசம்:
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 9 மணியளவில் விசாரணை நடத்தப்பட்டு, ஜுலியன் அசாஞ்சே ஒப்புக்கொள்ளும் குற்றத்திற்காக 62 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. ஆனால், அவர் ஏற்கனவே குற்றத்திற்கான சிறை தண்டனையை அனுபவித்துவிட்டதால், விசாரணை முடிந்ததுமே அசாஞ்சே ஆஸ்திரேலியா புறப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக கடந்த 1901 நாட்களாக இங்கிலாந்தில் அவர் அனுபவித்து வந்த சிறைவாசம் முடிவுக்கு வருகிறது என விக்கி லீக்ஸ் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அடிமட்ட அமைப்பாளர்கள், பத்திரிகை சுதந்திர பரப்புரையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும், ஐக்கிய நாடுகள் சபை வரையிலாஉலகளாவிய பிரச்சாரத்தின் விளைவாகவே ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த ஜுலியன் அசாஞ்சே:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஜுலியன் அசாஞ்சே, கடந்த 2010ம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்களை, தனது விக்கி லீக்ஸ் எனப்படும் இணையதள பக்கத்தில் வெளியிட்டார். அதனால் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. அத்தகைய சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய 2010-ம் ஆண்டு நவம்பரில் ஸ்வீடன் நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார். ஆனால், 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. அதன் விளைவாக பிரிட்டிஷ் காவல்துறையினர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய, கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு முன்வைத்து உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது. ஆனால் அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.