அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான 'ஜான்சன் அண்டு ஜான்சன்' தயாரிக்கும் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரில், புற்று நோயை ஏற்படுத்தும் 'ஆஸ்பெஸ்டாஸ்' என்ற துகள்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனம் மீது பிரிட்டனில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக காண்போம்.
குழந்தைகளுக்கான டால்கம் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் துகள்
அமெரிக்காவின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனையாகி வரும் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரில், 'ஆஸ்பெஸ்டாஸ்' துகள்கள் கலந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த துகள்கள், மனிதர்களுக்கு புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பவுடர்களில் ஆபத்தை ஏற்படுத்தும் துகள்கள் இருப்பது தெரிந்தே விற்பனை செய்ததாக கூறி, அந்நிறுவனத்தின் மீது இங்கிலாந்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்குகள்
கடந்த, 1960ம் ஆண்டு முதலே, ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் இந்த துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து நிறுவனம் எச்சரிக்கை விடுக்காமல் தொடர்ந்து, தன் தயாரிப்பு துாய்மையானது மற்றும் பாதுகாப்பானது எனக் கூறி அந்நிறுவனம் தனது பவுடரை சந்தைப்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 1973-ம் ஆண்டு, பவுடரில் பாதிப்பை ஏற்படுத்தும் கலவைகள் இருந்ததற்கான மிகச் சிறிய தடயங்கள் இருந்ததாக குறிப்பிட்டதை, வழக்கு தொடர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரிட்டனில் தொடரப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 3,000 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், அமெரிக்காவில் இதுபோன்று தொடரப்பட்ட வழக்குகளில், 67,000க்கும் மேற்பேட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
குற்றச்சாட்டை மறுக்கும் நிறுவனம்
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும், 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதன் தயாரிப்புகளில், 'ஆஸ்பெஸ்டாஸ்' துகள்கள் ஒருபோதும் கலந்திருக்கவில்லை என்றும், புற்றுநோயை ஏற்படுத்தவில்லை என்றும் அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது. அதன் தயாரிப்புகள் எப்போதும் ஒழுங்குமுறை விதிகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு பிரிட்டனின் வரலாற்றில் மிகப்பெரிய வழக்காக மாறக்கூடும் என்றும், இதற்கான இழப்பீடு பல நூறு மில்லியன் பவுண்டுகள் வரை எட்டும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
டால்கம் பவுடர்கள் எவ்வாறு தயாராகின்றன.?
'டால்க்' எனப்படும், இயற்கையாக கிடைக்கும் ஒருவகை கனிமத்தில் இருந்து டால்கம் பவுடர்கள் தயாரிக்கப்படுகின்றன. இது பெரும்பாலும், 'ஆஸ்பெஸ்டாஸ்' படிமங்களுக்கு அருகில் காணப்படுவதால், டால்க் கனிமத்தை தோண்டி எடுக்கையில் ஆஸ்பெஸ்டாஸ் படிமங்களுடன் கலப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு எடுக்கப்படும் கனிமங்கள் போதிய சுத்திகரிப்பின்றி பயன்படுத்தப்பட்டால், கனிமத்துடன் கலந்துள்ள ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள், புற்றுநோயை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
மாற்று வழிக்கு மாறிய 'ஜான்சன் அண்டு ஜான்சன்'
இந்நிலையில், தொடரும் சட்ட நெருக்கடிகள் காரணமாக, 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனம் டால்க் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை, கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவிலும், 2023-ம் ஆண்டில் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளிலும் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக சோளமாவு அடிப்படையிலான மாற்று தயாரிப்புக்கு மாறியுள்ளதாக தெரிகிறத. தற்போது இங்கிலாந்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள், 'ஜான்சன் அண்டு ஜான்சன்' டால்க் தயாரிப்புகள் மீதான உலகளாவிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.