IND PAK: தாலிபன்கள் உடனான மோதலுக்கு மத்தியில் இந்தியாவின் அச்சுறுத்தலும் இருப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாக்.,அமைச்சரின் சர்ச்சை கருத்து:
ஆஃப்கானிஸ்தான் உடனான எல்லைப் பிரச்னையில் மீண்டும் இந்தியாவையும் தொடர்புப்படுத்தி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எல்லையில் இந்தியா மோசமாக செயல்படக்கூடும். ஆஃப்கானிஸ்தான் உடனான எல்லை மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் இருமுனை மோதலுக்கும் தயாராக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். எல்லையில் இந்தியாவால் ஏதேனும் தாக்குதல் நிகழக்கூடுமா? என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இல்லை, கண்டிப்பாக அந்த வாய்ப்பு இருக்காது என கூற முடியாது. அதற்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன” என பதிலளித்துள்ளார்.
இருமுனை போர்:
தொடர்ந்து, இருமுனை போர் வெடித்தால் அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து பிரதமர் உடன் ஏதேனும் ஆலோசனை நடத்தினீர்களா? என செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, “ஆம், திட்டங்கள் கைவசம் உள்ளன. அது குறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது. ஆனால், எந்தவொரு சூழலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என பேசியுள்ளார். முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஜியோ செய்திகளுக்கு அளித்த பேட்டியில், ”ஆஃப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கம் இந்தியாவின் சார்பில் ஒரு மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது. தாலிபானின் முடிவுகள் டெல்லியால் ஆதரிக்கப்படுவதால், போர் நிறுத்தம் நீடிக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது” என கவாஜா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தியா சொல்வது என்ன?
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் பழக்கம் நன்கு அறியப்பட்டதாகும் என்றார். மேலும், "மூன்று விஷயங்கள் தெளிவாக உள்ளன. ஒன்று, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கிறது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறது. இரண்டு, அதன் சொந்த உள் தோல்விகளுக்கு அண்டை நாடுகளைக் குறை கூறுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம். மூன்று, ஆப்கானிஸ்தான் அதன் சொந்த பிரதேசங்களின் மீது இறையாண்மையைக் கொண்டிருப்பதில் பாகிஸ்தான் கோபமாக உள்ளது" என்று சாடினார். இந்த சூழலில் தான் இந்தியா எல்லையில் ஏதேனும் மோசமாக செய்யக்கூடும் என்று, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பேசியிருக்கிறார்.
பிரச்னை என்ன?
எல்லை தாண்டிய மோதல்களில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவு இஸ்லாமாபாத் மற்றும் காபூல் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை வந்தது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஒரு வாரமாக நீடித்த வன்முறையைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.