உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றின் பேராபத்து, அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகின் முதல் கொரோனா வழக்கு சீனாவில் உறுதி செய்யப்பட்டது, தொடர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் பரவி கோடிக்கணக்கானோரை வாட்டி வதைத்த கொரோனா வைரஸ் தொற்று லட்சக்கணக்கோரின் உயிரை பலி வாங்கியது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், அதன் பாதிப்புகள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன.


இந்நிலையில், முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துள்ளது. எனினும் கொரோனா தொற்றின் சில சிக்கல்கள் தொடர்கின்றன. அதனை ஒழிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.


நீங்கள் கவனியுங்கள், இங்கு யாரும் முகக்கவசம் அணியவில்லை. எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதுபோல் தெரிகிறது. அதனால் தான் கொரோனா முடிவுக்கு வந்துள்ளது, நிலைமை மாறியுள்ளது என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


 






அமெரிக்காவில் இன்றும் கொரோனா தொற்றுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்தக் கூற்று தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.






”கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு இடையே உலகம் முழுவதும் குறைந்தது ஒரு கோடியே 94 லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 24 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் ஜோ பைடனின் இந்தக் கருத்து ஏற்புடையது அல்ல” என அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றனர்.