பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு பெருநிறுவனத்தலைவர்கள், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து நேற்று இரவு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு மோடி நேற்றுதான் முதன்முறையாக அவரை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து பேசிய ஜோ பைடன் 2006ல் தான் துணை அதிபராக இருந்தபோது 2020ல் இந்தியாவும் அமெரிக்காவும் உலகிலேயே மிக நெருக்கமான நாடாக இருக்கும் எனக் கூறியிருந்ததை நினைவுக்கூர்ந்தார்.
முன்னதாக இருதலைவர்களின் சந்திப்பின்போது ஒரு ருசிகர சம்பவம் அரங்கேறியது.
பைடன் தன்னுடைய உரையைத் தொடங்கியபோது, 1972ம் ஆண்டில் தன்னுடைய 28வது வயதில் தான் முதன்முதலாக அமெரிக்காவின் செனெட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மும்பையிலிருந்து தனக்கு ஒரு கடிதம் வந்திருந்ததை நினைவு கூர்ந்தார். அதில் தன்னுடைய குடும்ப பெயரும் பைடன் தான் என அந்த நபர் குறிப்பிட்டிருந்ததாகவும், அது தொடர்பான தகவல்களைப் பின்பற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் துணை அதிபராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக மும்பை வந்திருந்தேன்.. அதன்பிறகான பத்திரிகையாளர் சந்திப்பின்போது எனக்கு இந்தியாவில் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? என என்னை நோக்கி ஒரு பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்” என சொல்லி மோடியை நோக்கி பைடன் சிரித்தார்.
அதன்பிறகு, அடுத்த நாளில் இந்தியாவில் சில பைடன்கள் இருப்பதாக இந்திய பத்திரிகையாளர்கள் தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். ஆனால் அதை தான் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் இந்தியாவில் கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் கேப்டனாக கேப்டன் ஜார்ஜ் பைடன் இருந்ததை கண்டுபிடித்ததாக தெரிவித்தார். மேலும் அவர் இந்தியாவிலேயே தங்கியிருந்து இந்திய பெண்ணை திருமணம் செய்திருக்கக்கூடும் என்றும், அதுகுறித்த மேலதிக விவரங்களை தன்னால் பெற முடியவில்லை என்றும் தெரிவித்தார். அதுகுறித்தெல்லாம் கண்டுபிடிக்க பிரதமர் மோடி தான் தனக்கு உதவ வேண்டும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, பைடன் எனும் குடும்ப பெயர் பற்றி ஜோ பைடன் ஏற்கெனவே தன்னுடன் பேசியதாக குறிப்பிட்டார். மேலும் அதற்காக சில ஆவணங்களைத் தேடியதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பைடன்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்பதை நிரூபிக்க தான் சில ஆவணங்களை தன்னோடு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் நரேந்திர மோடி நகைச்சுவையாக கூறினார்.
அப்போது மோடியை பார்த்து நாம் உண்மையில் தொடர்புடையவர்களா என பைடன் கேட்டார்.
“அதை உறுதி செய்ய இந்த ஆவணங்கள் உங்களுக்குப் பயன்படலாம்” என்று மோடி பைடனிடம் கூறினார்.
இந்நிலையில் அதிபர் பைடனின் இந்திய தொடர்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.