அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அந்நாட்டு அதிபர் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். புகழ்பெற்ற இந்த உரை, State of the Union speech என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டின் கூட்டுக் கூட்ட உரையை அமெரிக்க அதிபர் பைடன் இன்று ஆற்றினார். உரை நிகழ்த்த பைடன் தயாராகி கொண்டிருந்தபோது, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டில் அதிபர் பைடனின் மனைவி ஜில் முத்தமிட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் எம்பிக்கள் சிறுது நேரம் முழித்து கொண்டிருந்தனர். உண்மையில், இருவரும் கட்டி ஆற தழுவவே இருக்கையில் இருந்து எழுந்தனர். ஆனால், நடுவில் இருவரில் ஒருவர் தவறாக அருகில் வர இறுதியில் உதட்டுக்கு மிக மிக அருகில் ஜில் முத்தம் கொடுத்துவிட்டார்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கை கொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார் ஜில் பைடன். இந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் உள்ளூர் பத்திரிகைகள் தொடர் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கமலா ஹாரிஸின் கணவரின் உதட்டுக்கு மிக மிக அருகில் ஜில் முத்தமிட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பைடன் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் ஃபாக்ஸ் நியூஸ், தெரியாமல் நடந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கெல்லியன் கான்வே, இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, "வாவ், கொரோனா முடிந்துவிட்டது" என பதிவிட்டுள்ளார்.