எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின், அதில் பணியாற்றிய 50% ஊழியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதைதொடர்ந்து, மெட்டா மற்றும் அமேசான் போன்ற சர்வதேச நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி அளித்தன. இத்தகைய நடவடிக்கையால் நவம்பர் மாதத்தில் மட்டும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், தங்களது உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 38,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
இதனிடையே, உலகின் முன்னணி டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் டெக் நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ, தனது மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேர் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் இந்த அறிவிப்புகளால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
”பணத்தை செலவு செய்யாதீர்கள்” - பெசோஸ்
இந்நிலையில் தான் அமேசான் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெசோஸ், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், நுகர்வோரும், வியாபாரிகளும் தற்போதைய சூழலில் பெரும் தொகையை முதலீடு செய்து எதையும் வாங்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். அமெரிக்கர்கள் அடுத்து வரும் சில மாதங்களுக்கு அனாவசிய செலவை குறைத்துக்கொண்டு, கையிருப்பில் பணத்தை வைத்து இருப்பது நல்லது என வலியுறுத்தியுள்ளார்.
”டிவி, ஃபிரிட்ஜ் வாங்க வேண்டாம்”:
பொருளாதார மந்தநிலை வலுவடைந்தால் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் சூழல் மோசமாக இருக்கலாம் எனவும், அதில் கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம் என ஜெஃப் பெசோஸ் கூறினார். வாகனங்கள், பெரிய டிவி மற்றும் பிரிட்ஜ் ஆகியவற்றை வாங்கும் திட்டமிட்டு இருந்தால் சிறிது காலம் காத்திருங்கள் எனவும், ஆபத்தான முடிவுகளை தவிர்ப்பதன் மூலம் சிறு தொழில்கள் சிக்கலை தவிர்க்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
சொத்தின் பெரும்பகுதியை தானமாக வழங்குவேன்:
அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது நன்றாக இல்லை, வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ள நிலையில் தான், பல துறைகளில் பணிநீக்கங்களை காண முடிகிறது என்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பெசோஸ், தனது மொத்த சொத்து மதிப்பன ரூ.10 லட்சம் கோடியில் பெரும்பகுதியை காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் பிளவுகளுக்கு மத்தியில் மனித குலத்தை ஒருங்கிணைக்கக்கூடிய மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழக்க இருப்பதாக கூறினார்.