கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச்சென்றது. பலரின் உயிரை பறித்து, பலருக்கு குடும்பம் இல்லாமல் ஆக்கியது.


ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்:


இந்த நிலையில், இந்தாண்டின் முதல் தேதியிலேயே ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.






பெரும் சேதம் காரணமாக இன்னும் பல பகுதிகள் மீள முடியாத நிலையில், மீண்டும் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.  ஜப்பான் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.


ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக  தேசியி நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதா என்ற எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


உருக்குலைந்த ஜப்பான்:


முன்னதாக, ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் புத்தாண்டு அன்று 7.6 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. 90 நிமிடங்களில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டன. ஹொகைடோ தீவுகள் முதல் நாகசாகி வரை நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது.


இதனால், அந்த பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை, சில இடங்களில் 5 மீட்டர் உயரத்திற்கு கூட அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் சாலைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. டோயாமா மற்றும் கனாசாவா நகரங்களுக்கு இடையிலான பிரதான நெடுஞ்சாலையானது பல நூறு மீட்டர் தூரத்திற்கு நிலச்சரிவால் அழிந்தது. வீடுகள், கட்டடங்கள் என அனைத்து சேதம் அடைந்தன. 


இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால், 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிடுக்கத்தில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 240க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.