கடந்த வியாழன் அன்று இத்தாலியில் 44 வயதான நபர் ஒருவர் மருத்துவ உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இது அந்த நாட்டிலேயே முதல் முறையாகும்.


இத்தாலியில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ள உதவுவது தொழில்நுட்ப ரீதியாக சட்டத்திற்கு எதிரானது என்றாலும், நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் சில விதிவிலக்குகள் இருக்கலாம் என்று 2019ல் தீர்ப்பளித்தது.


ஃபெடெரிகோ கார்போனி என்று அவரது மரணத்திற்குப் பிறகு அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒரு சிறப்பு இயந்திரம் மூலம் ஒரு கொடிய காக்டெய்ல் மருந்தை உட்கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்


அவர் உயிர் பிரியும்போது அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் உடன் இருந்தனர்.


கார்போனியின் மரணம் லூகா கோசியோனி அசோசியேஷன், கருணைக்கொலை பிரச்சாரக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்புதான் நீதிமன்றங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் அவரது வழக்கைத் தொடர உதவியது.


கார்போனி 44 வயதான முன்னாள் டிரக் டிரைவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து விபத்தைத் தொடர்ந்து கழுத்தில் இருந்து கீழே முடங்கினார்.






"வாழ்க்கையிலிருந்து விடைபெறுவதற்கு நான் வருந்துகிறேன் என்பதை நான் மறுக்கவில்லை," என்று அவர் இறப்பதற்கு முன் கூறியுள்ளார்.


மேலும்,"என்னால் முடிந்தவரை சிறப்பாக வாழ என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், மேலும் எனது இயலாமையைப் பயன்படுத்த முயற்சித்தேன், ஆனால் நான் இப்போது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் எனது வாழ்வின் முடிவில் இருக்கிறேன்" என்று கார்போனி கூறினார்.


கார்போனி ஒரு டெட்ராப்லெஜிக். அதாவது, கையிரண்டும் கால் இரண்டும் செயலிழந்தவர். அவருக்கு 24 மணி நேர கவனிப்பு தேவைப்பட்டது, அவரை மற்றவர்களை நம்பி, சுதந்திரம் இல்லாமல், "கடலில் மிதக்கும் படகு" போல் உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.


"இப்போது நான் எங்கு வேண்டுமானாலும் பறக்க முடியும் சுதந்திரமாக உணர முடியும்," என்று அவர் தனது இறுதி வாசகத்தில் கூறியுள்ளார்.


2019 ஆம் ஆண்டில், இத்தாலியின் உச்ச நீதிமன்றம் சில சந்தர்ப்பங்களில் மருத்துவ உதவியுடனான இறப்புக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த பிரச்சினை ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் பழமைவாத கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தது.


மருத்துவ உதவியுடனான இறப்புக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய சில தேவைகளை நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது. எடுத்துக்காட்டாக, ஒரு நோயாளியை குணப்படுத்த முடியாது என்பது தெளிவாக இருக்க வேண்டும்.நோயாளி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் "சகித்துக்கொள்ள முடியாத" வலியை அனுபவிக்கிறார்.
ஒரு நோயாளி தனது சொந்த முடிவுகளை எடுப்பதற்கும் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கும் முழுமையாகத் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.


கார்போனி கடந்த நவம்பரில் நெறிமுறைக் குழுவிடமிருந்து அனுமதியைப் பெற்றார். சுகாதார அதிகாரிகளின் தொடக்கநிலை மறுப்பைச் சமாளித்து, நீதிமன்றத்திற்கு தனது வழக்கை எடுத்துச் சென்றார். தான் இறப்பதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற நாட்டிலேயே முதல் நபர் இவர்தான்.


பின்னர் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தேவையான மருந்துகள் மற்றும் சிறப்பு உபகரணங்களை வாங்க பணம் தேவையாக இருந்தது. இதற்கு அவருக்கு உதவிய அமைப்பு க்ரவுட் ஃபண்டிங் முறையில் பணம் சேகரித்துத் தந்தது.