பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய போர் தீவிரம் அடைந்துள்ளது. தாக்குதலை பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், தற்காத்து கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அப்பட்டமான போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 11,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 40 சதவிகிதத்தினர் குழந்தைகள். பெண்களும் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை, அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலக மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
தீவிரம் அடைந்துள்ள இஸ்ரேல் போர்:
போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு மருத்துவமனைகள்தான் அடைக்கலம் தந்து வருகிறது. வான்வழி தாக்குதலில் உயிர் பிழைத்து வரும் அப்பாவி மக்களுக்கு பாலஸ்தீன மருத்துவர்கள், தங்களின் உயிர்களை பணயம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அல் ஷிபா மருத்துவமனைக்கு உள்ளே இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் புகுந்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதுவே காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையானயாக கருதப்படுகிறது. இந்த மருத்துவமனையின் கீழே யாருக்கும் தெரியாமல் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டு அறையை வைத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மருத்துவமனையின் கீழே இருந்து கொண்டு, ஹமாஸ் அமைப்பினர் ரகசியமாக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலும் வரவேற்பு அறையிலும் புகுந்த ராணுவத்தினர், அங்கு இஸ்ரேல் பணயக்கைதிகள் எவரேனும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனரா என ஆராய்ந்து வருகின்றனர்.
நிலைகுலைந்த காசா மருத்துவமனை:
மருத்துவமனைக்கு உள்ளே புதிதாக பிறந்துள்ள குழந்தைகள், நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்ற சூழலில், இஸ்ரேல் ராணுவத்தினர், புகுந்துள்ளனர். அந்த மருத்துவமனையுடனான தொடர்பை இழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
"காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேலியப் பாதுகாப்பு படைகள் நுழைய தொடங்கிய பின்னர், அந்த மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்களுடனான தொடர்பை உலக சுகாதார அமைப்பு இழந்துவிட்டது. அல் ஷிபா மருத்துவமனையில் ராணுவ ஊடுருவல் பற்றிய தகவல்கள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன" என டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
அங்கு நிலைமை கைமீறி சென்றுள்ள நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி அரபு நாடுகள் வலியுறுத்தி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் போரை தள்ளி வைக்க வேண்டும் என அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், இஸ்ரேல் அதை முற்றிலுமாக நிராகரித்து வந்தது.