Heat Rise: காலநிலை மாற்றம் தொடர்பான லான்செட் ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


புவியில் அதிகரிக்கும் வெப்பநிலை:


2023ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவிலான மிகவும் வெப்பான ஆண்டாக பதிவாகியுள்ளது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவில், 2022ம் ஆண்டு வரையிலான அதிகபட்ச வெப்பநிலை உள்ளிட்ட அனைத்து குறியீடுகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உடல்நலன் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான லான்செட் ஆய்வறிக்கையானது, மேலும் தாமதமாகும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளால், ஏற்படக் கூடும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளது. 


”உயிரிழப்புகள் 370% அதிகரிக்கும்”


லான்செட் ஆய்வறிக்கையின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகம் இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பமடையும் சூழலில்,  அது தற்போது 2.7C-க்கான பாதையில் உள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் மக்கள் சராசரியாக 86 நாட்கள் உயிருக்கு ஆபத்தான வெப்பநிலைக்கு ஆளாகியுள்ளனர். அந்த நாட்களில் சுமார் 60 சதவிகிதம் காலநிலை மாற்றத்தால் இரண்டு மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது. 1991-2000 முதல் 2013-2022 வரை வெப்பத்தால் இறந்த 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 85 சதவீதம் அதிகரித்துள்ளது.  தொடரும் காலநிலை மாற்றத்தால், நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதாவது 2050வது ஆண்டில், தற்போது வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட 4.7 மடங்கு அதாவது 370 சதவிகிதம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 


”மக்கள் பட்டினியில் தவிக்க வாய்ப்பு”


மிகவும் பொதுவான வறட்சியால் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சுமார் 52 கோடி மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வார்கள். இதனால் பெரும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். கொசுக்கள் முன்பை விட அதிகமாக பரவும். தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும். குறிப்பாக டெங்கு பாதிப்பு 36 சதவிக்தம் வரை அதிகரிக்கும். இதனால், சுகாதார அமைப்புகள் பணிச்சுமையை சமாளிக்க போராடும் என்று எச்சரித்துள்ளனர். அதோடு, வெப்பம் அதிகரிப்பதால் தொழிலாளர்களின் பணி நேரம், 50 சதவிகிதம் இழப்பை சந்திக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஆராய்ச்சியாளர்கள் தரும் எச்சரிக்கை:


எரிபொருட்களின் தொடர் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்யும் அரசாங்கங்கள். நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நடவடிக்கையை "அலட்சியம்" என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால்,  சவால்கள் மற்றும் செலவுகள் உயர்ந்து, உலகம் மீளமுடியாத தீங்குகளை நெருங்குகிறது. காலநிலை மாற்றத்தின் மூல காரணங்களைச் சமாளிக்க ஆழமான மற்றும் விரைவான நடவடிக்கைகள் இல்லாமல், மனிதகுலத்தின் ஆரோக்கியம் பெரும் ஆபத்தில் உள்ளது என்று எச்சரித்துள்ளனர். 


உலகப் பொருளாதாரத்தில் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நிலையை அவசர சுகாதார நடவடிக்கையாக கட்டாயப்படுத்த வேண்டும். அதேநேரம், மாற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்கி பாதுகாப்பான குடிநீர், ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் அணுகல், பாதுகாப்பு, தூய்மையான காற்று மூலம் உலக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் எனவும் லான்செட் ஆய்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.