Continues below advertisement

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்குச் செல்லும் போது, ​​இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ ஜெட் விமானமான "விங்ஸ் ஆஃப் சீயோன்", ஐரோப்பிய வான்வெளியைத் தாண்டிச் செல்லும் பாதையை தவிர்த்து, வேறு பாதையில் சென்றுள்ளது. எதற்காக இந்த பிளான் தெரியுமா.? அவர் கைதாவதை தவிர்க்கத் தான். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

கைதாவதிலிருந்து தப்பிக்க மாஸ்டர் பிளான்

Continues below advertisement

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று நியூயார்க்கிற்குச் செல்லும் வழியில், ஐரோப்பாவின் பெரும்பாலான வான்வெளிகளைத் தவிர்த்தார். போர்க்குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்படுவதை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளைத் தவிர்த்து அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். ​​இஸ்ரேலியத் தலைவரின் அதிகாரப்பூர்வ ஜெட் விமானமான "விங்ஸ் ஆஃப் சீயோன்" ஐரோப்பிய வான்வெளியைத் தாண்டிச் செல்லும் பாதையை தவிர்த்துள்ளது.

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நெதன்யாகு

விமான கண்காணிப்பு தரவுகள் மாற்றுப்பாதையைக் காட்டுகின்றன. இது, ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(International Criminal Court) கடந்த 2024 நவம்பரில், நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லண்ட் ஆகிய இருவரையும், காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டி கைது வாரண்ட் பிறப்பித்தது. இனால், கைது போன்ற எந்த சிக்கல்களையும் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டே நெதன்யாகு மாற்றுப்பாதையில் சென்றதாக கருதப்படுகிறது.

ஐரோப்பாவில் உள்ள பல ஐசிசி உறுப்பு நாடுகள், நெதன்யாகு தங்கள் எல்லைக்குள் நுழைந்தால், வாரண்டின் கீழ் தங்கள் கடமைகளை மேற்கோள் காட்டி, அவரைக் கைது செய்வோம் என்று பகிரங்கமாக கூறியுள்ளன. ஐசிசி கையொப்பமிட்டவர்கள் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி செயல்படுவதாக உறுதியளித்துள்ள நாடுகள் மீது பறப்பதையும், விமானத்தை தரையிறங்க கட்டாயப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதற்காகவும் இந்தப் பாதை வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாற்றுப் பாதையில் பயணம்

அதற்கு பதிலாக, நெதன்யாகுவின் ஜெட் ஒரு தெற்கு வளைவைக் கண்டறிந்து, கிரீஸ் மற்றும் இத்தாலியின் எல்லைகளை மட்டுமே கடந்து, மத்தியதரைக் கடலைக் கடந்து, பின்னர் ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து, மற்ற ஐரோப்பிய நாடுகள் வழியாகச் செல்லாமல், மாற்றுப் பாதையில் சென்றது.

பொதுவாக, அமெரிக்காவிற்குச் செல்லும் இஸ்ரேலிய விமானங்கள் பிரெஞ்சு வான்வெளி உட்பட மத்திய ஐரோப்பா முழுவதும் வேகமாகவும், நேரடியாகவும் பயணிக்கின்றன. இந்த மாற்றுப் பாதை பயணத்தில் சுமார் 373 மைல்கள் (600 கி.மீ) கூடுதலாக சேர்த்ததாக விமான நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

நெதன்யாகுவை கைது செய்ய காத்திருக்கும் நாடுகள்

நெதன்யாகு தனது மண்ணுக்கு வந்தால் கைது நடவடிக்கை எடுப்பதாக அயர்லாந்து கூறியுள்ளது. அதே நேரத்தில், ஸ்பெயின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளது. இதற்கு மாறாக, பிரான்ஸ் அவரைக் கைது செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளது. மேலும், அத்தகைய நடவடிக்கை சாத்தியமா என்று இத்தாலி கேள்வி எழுப்பியுள்ளது.

மாற்றப்பட்ட விமானப் பாதைக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், பிரெஞ்சு வான்வெளியைப் பயன்படுத்த இஸ்ரேல் அனுமதி கோரியதை ஒரு பிரெஞ்சு தூதரக வட்டாரம் உறுதிப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், அனுமதி வழங்கப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினார். ஆனால், இஸ்ரேலிய பிரதிநிதிகள் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர். "அவர்கள் வேறு பாதையில் செல்ல முடிவு செய்தனர், அதற்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை," என்று பிரெஞ்சு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பிற்காக வாஷிங்டனுக்குச் செல்வதற்கு முன்பு, இன்று ஐநா பொதுச்சபையில் நெதன்யாகு உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.