பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் திக்குமுக்காடிய நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே, இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதன் உச்சக்கட்டமாக தற்போது போர் வெடித்துள்ளது.


இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் நடைபெறாத அளவுக்கு இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் தெற்கு நகரங்களில் கண்ணில் பட்ட அப்பாவி மக்கள் எல்லோரையும் அவர்கள் சுட்டதாக கூறப்படுகிறது.


சமூக வலைதளங்களில் உலா வரும் வைரல் வீடியோ:


இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட வீடியோ ஒன்றை ஸ்டெரோட் நகரில் வசிப்பவர் ஒருவர் எடுத்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் உலா வரும் அந்த வீடியோவில் தெருக்களில் செல்லும் அப்பாவி மக்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் சுடுவது பதிவாகியுள்ளது.


 






தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கொண்டு ஒரு நபர், அந்த சம்பவத்தை வீடியோவாக எடுக்கிறார். பின்னர், வீடியோ எடுக்கும் நபரை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கியை திருப்புகின்றனர். சுதாரித்து கொண்டு அந்த நபர் பாதுகாப்பை தேடி ஓடுகிறார்.


இந்த வீடியோவை சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர் ஆர்சன் ஆஸ்ட்ரோவ்ஸ்கி, எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதேபோன்று, காசாவில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதில், இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை சாலைகளுக்கு இழுத்து வந்த தீவிரவாதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.


காசாவை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என காசாவை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கூறி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக, இஸ்லாமியர்களின் புனித தளமாக கருதப்படும் ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சாவை இழிவுப்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.


இஸ்ரேலுக்கு அமெரிக்க, இந்திய நாடுகள் ஆதரவு:


இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குறிப்பிடுகையில், "இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதல்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.