மத்திய கிழக்கில் அமைந்துள்ள லெபனான் நாட்டின் தெற்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஹிஸ்புல்லா இயக்கம். கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம் ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு முக்கிய ஆதரவாக இருந்து வருவது ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் ஆவர்.


காசாவாக லெபனான்?  மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் முக்கிய எதிரியாக இருப்பது ஹிஸ்புல்லா இயக்கம்தான். ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு, ஆண்டுக்கு லட்சக்கணக்கான டாலர்களை ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வருகிறது.


ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையேயான போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு இடையே தினசரி மோதல் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், லெபனானில் நடந்த பேஜர், வாக்கிடாக்கி உச்சக்கட்ட பதற்றத்தை உண்டாக்கியது. இதற்கு இஸ்ரேலே காரணம் என சொல்லப்படுகிறது.


இதையடுத்து, லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம். லெபனானில் உள்ள டயர் நகரில் இஸ்ரேல் விமானப்படையால் 7 முறை விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கு தாக்குதலை விரிவுப்படுத்தி வருகிறது. இதனால், கடந்த நான்கு நாட்களில் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 


நெதன்யாகுவை தடுக்கவே முடியாதா? 


இச்சூழலில், 21 நாள் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை முயற்சி செய்து வருகின்றன. ஆனால், இதில் இஸ்ரேல் தரப்பு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தரப்பு பேசுகையில், "போர் நிறுத்தத்தை அமெரிக்காவும் பிரெஞ்சும் முன்மொழிந்துள்ளது. இதற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை" என தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன், பிரெஞ்சு அதிபர் மக்ரோன் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "லெபனானின் நிலைமையை ஏற்று கொள்ள முடியாது. இஸ்ரேல் மக்களுக்கோ அல்லது லெபனான் மக்களுக்கோ எவருக்கும் இதில் விருப்பமில்லை. லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


வான்வழி தாக்குதலை தொடர்ந்து நிலம் வழியாக தாக்க இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.