Israel Attacks Iran: ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஈரானின் இசாபஹான் நகரில் உள்ள விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், ஆனால் அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்:


சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. அதேநேரம், இதற்கு பதிலடி தந்தால் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்து இருந்தது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளும், ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தக் கூடாது என எச்சரித்து இருந்தன. ஆனால், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகும் எங்களது ராணுவ நடவடிக்கைகளுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என பேசியிருந்தார். இந்நிலையில், தான் ஈரானின் முக்கிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வான்வழி தாக்குதல் எனவும் கூறப்படுகிறது.


குறிவைக்கப்பட்ட அணுசக்தி தளங்கள்:


மத்திய நகரமான இஸ்ஃபஹான் அருகே "பெரிய வெடிப்புகள்" பதிவாகியுள்ளதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை காலை செய்தி வெளியிட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகர் தெஹ்ரான் மற்றும் ஈரானின் பிற முக்கிய நகரங்களுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்புகளுக்கான காரணம் உறுதியாகாவிட்டாலும், இந்த சம்பவத்தில் இஸ்ரேலின் தலையீடு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மைய புள்ளியாக செயல்படும் நடான்ஸ் உட்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் இஸ்பஹான் மாகாணத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


விமான சேவை முடக்கம்:


ஈரான் முழுவதும் பல பிராந்தியங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டதோடு, தெஹ்ரான், இஸ்பஹான் மற்றும் ஷிராஸுக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டதையும் மெஹ்ர் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது. அதேநேரம், இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.






மூன்றாவது போர்:


ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - காஸா இடையேயான போரும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தான் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றமும் அதிகரித்துள்ளது. ஒருவேளை இருநாடுகளுக்கு இடையேயான இந்த போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கினால், சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.