கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி, பாலஸ்தீன பகுதியான காசாவில் தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
மனித இனத்திற்கு எதிரான குற்றம்:
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். இஸ்ரேல் மீது கடுமையான போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு மனித உரிமை மீறலில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
போரால் நிலைகுலைந்துள்ள காசாவில் நேற்று முன்தினம் பாலஸ்தீனியர்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது, உணவை எடுக்க அப்பாவி மக்கள் முந்திக் கொண்டு வந்துள்ளனர். அப்போது, அவர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 112 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 750க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உலக வரலாற்றில் இருண்ட பக்கங்களாக கருதப்படும் இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொந்தளித்த உலக தலைவர்கள்:
இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் பேசுகையில், "பீதியை தரும் இந்த மோசமான துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் முழு விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
"என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீபன் செஜோர்ன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி கூறுகையில், "காசாவில் மக்களை பாதுகாக்கவும் இதற்கு யார் பொறுப்பு என உண்மைகளை கண்டறியவும் இஸ்ரேலை கேட்டு கொள்கிறேன்" என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், "இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன்" என்றார். தங்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, போரால் நிலைகுலைந்துள்ள காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. குறிப்பாக, உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய உலக உணவு திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், "எதுவும் மாறவில்லை என்றால் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படுவது நிச்சயம்" என்றார்.