லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதலில்  ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


மத்தியக் கிழக்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் போர்க் களத்துக்கு ABP News நேரடியாகச் சென்றுள்ளது.  அங்கிருந்து நமது மூத்த செய்தியாளர் ஜக்வீந்தர் பாட்டியால் அளிக்கும் தகவல்களின்படி,


ஹஷெம் சைஃபுதீன் கொலையா?


இஸ்ரேல் மீண்டும் ஹிஸ்புல்லா மீது தனது தாக்குதலைத் தொடங்கி உள்ளது. லெபனானின் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் ஹஸ்ஸன் நஸ்ரல்லாவின் சகோதரர் ஹஷெம் சைஃபுதீன் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த மாதம் ஹஸ்ஸன் நஸ்ரல்லா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, சைஃபுதீனே தலைவராகப் பொறுப்பேற்க இருந்தார். இந்த நிலையில் இவரும் கொல்லப்பட்டது ஹிஸ்புல்லாவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 


நடந்தது என்ன?


ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் நிதி, ஆயுத உதவிகளைச் செய்து வந்தது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனி ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவர் ஹஸ்ஸன் நஸ்ரல்லாவையும் இஸ்ரேல் படுகொலை செய்தது. 


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் அக்டோபர் 1ஆம் தேதி நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்னெச்சரிக்கை செய்த நிலையில், சேதாரம் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் சூளுரைத்தது. 


37 பேர் பலி, 151 பேர் காயம்


இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் குடியிருக்கும் லெபனான் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 151 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. லெபனான் ராணுவ வீரர்கள் இருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.