Israel - Hamas War: காஸா பகுதியில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேலும் பல பணயக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் இடைநிறுத்தம் நீட்டிப்பு:
காஸா பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று, பாலஸ்தீனிய குழு மற்றும் கத்தாரைச் சேர்ந்த மத்தியஸ்தர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மனிதாபிமான இடைநிறுத்தம்" என்று அழைக்கப்படும் இந்த போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை அதிகாலை முடிவடைய இருந்த நிலையில், தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் அதை 48 மணிநேரம் நீட்டிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதேநேரம், இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, போரின் இருளின் நடுவில் நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தின் ஒரு பார்வை தெரிவதாக, இடைநிறுத்தம் தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டாரெஸ் தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் நீட்டிப்பு பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை மேலும் விடுவிக்க வழிவகை செய்யும் என நம்பப்படுகிறது. அதோடு காஸாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் அரசு சொல்வது என்ன?
கத்தார் அரசு அமெரிக்கா மற்றும் எகிப்தின் ஆதரவுடன் காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இடைநிறுத்தம் தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி பேசுகையில், "காஸா பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
பிரச்னையின் தொடக்கப்புள்ளி:
கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு, ஏராளமானோர் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழிக்கப்படும் என கூறி, இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கைவசம் உள்ள காஸா பகுதியின் மீது மும்முனை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்தனர். இந்த சூழலில் தான் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் எடுத்த முயற்சியின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 4 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
விடுவிக்கப்படும் பணயக்கைதிகள்:
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, தங்கள் வசம் இருந்த 13 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 வயது சிறுமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது. இதற்கு இணையாக 117 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.