Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Israel Hamas War: காஸாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Israel Hamas War: காஸாவில் நாளை முதல் (ஞாயிற்றுக்கிழமை) போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்:
காசாவில் 15 மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இஸ்ரேல் அரசாங்கம் சனிக்கிழமையன்று ஹமாஸ் உடனான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த போர் நிறுத்தமானது ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். மேலும் பணயக்கைதிகளை வ்டுவிப்பது குறித்தும் இந்த உடன்படிக்கையில் முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.
நீடித்த இழுபறி - கிடைத்த முடிவு
ஹமாஸ்-இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம் கத்தார் மற்றும் அமெரிக்காவால் புதன் அன்று மத்தியஸ்தம் செய்யப்பட்டது. இருப்பினும் கூட்டண் கட்சிகளின் அழுத்தம் போன்ற கடைசி நிமிட சிக்கல்கள் இருப்பதாக நெதன்யாகு கூறியதால், ஒரு நாளுக்கும் மேலாக அமைச்சரவை ஒப்புதலுக்கு இழுபறி நீடித்தது. அதைதொடர்ந்து, சனிக்கிழமையன்று ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு, பிணைக் கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதை இலக்காகக் கொண்ட மூன்று கட்டத் திட்டத்தின் முக்கிய அங்கமான ஆறு வார போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக , பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்த சில அமைச்சர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, நேதன்யாகுவின் அமைச்சரவை உறுப்பினர்கள் 24 பேர் போர்நிறுத்தத்தை ஆதரித்தனர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஏற்கனவே இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தாலும், இதற்கு இரண்டு சுற்று ஒப்புதல் தேவைப்படுகிறது.
போர் நிறுத்த பலன்கள்:
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் உட்பட 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். அதற்கு ஈடாக, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் விடுவிக்கும். காசாவில் நடந்து வரும் மோதல்கள், பிராந்தியத்தின் பெரும்பகுதியை இடிபாடுகளாக மாற்றியுள்ளது. 46,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயர தூண்டியுள்ளது. ஈரான், ஹிஸ்புல்லா, ஏமன் மற்றும் ஈராக்கில் இருந்து ஆயுதக் குழுக்கள் உட்பட பல்வேறு மத்திய கிழக்கு பிரிவுகளை ஈர்த்துள்ளது.
போரின் தொடக்கப்புள்ளி
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலை இஸ்ரேலுக்குள் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 250 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். காசாவில் கிட்டத்தட்ட 100 பணயக்கைதிகள் உள்ளனர். இதன் காரணமாக நீரு பூத்த நெருப்பாக இருந்த இஸ்ரேல்-பாலஸ்தீன இடையேயான நீண்ட கால மோதல் போராக வெடித்தது. அமெரிக்காவின் ஆதரவுடன் காஸாவில், இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நிகழ்த்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான குழந்தைகள் கொல்லப்பட்டனர்.