TVK Vijay: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- 65 பேர் வேட்புமனு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, வரும் 5ம் தேதி அந்த தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என, அதிமுக, தேமுதிக, பாஜக போன்ற பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. இருப்பினும் நேற்றுடன் முடிவடைந்த வேட்புமனுதாக்கலில், 65 பேர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரும் அடங்குவர். இந்த மனுக்கள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது.
திமுக Vs நாதக - இருமுனைப்போட்டி:
வழக்கமாக தமிழக அரசியல் களத்தில் திமுக Vs அதிமுக என்ற இருமுனைப்போட்டியே நிலவும். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்த முறை திமுக Vs நாதக என்ற புதிய இருமுனைப்போட்டி நிலவுகிறது. இது திமுகவிற்கு சாதகமான சூழலாகவே கருதப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தது, ஆளும் கட்சிக்கு மேலும் ஒரு வெற்றியை எளிதாக பரிசளிப்பது போல் அமைந்துவிட்டதாக அரசியல் வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.
சீமானின் இலக்கு என்ன?
கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர், 10 ஆயிரம் வாக்குகள் அதாவது சுமார் 6 சதவிகித வாக்குகளை பெற்றார். ஆனால், இந்த முறை அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் யாருமே போட்டியிடவில்லை. இதன் காரணமாக, திமுக எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாக தங்கள் பக்கம் ஈர்க்க சீமான் திட்டமிட்டுள்ளார். வெற்றிக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தை எட்ட நாதக தீவிரம் காட்டுகிறது. அது 2026ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, தங்கள் கட்சிக்கு ஊக்கம் அளிக்கும் எனவும் சீமான் நம்புவதாக தெரிகிறது.
கோட்டைவிட்ட விஜய்:
அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற பிரதான கட்சிகள் புறக்கணித்ததால் தான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக Vs நாதக என மாறியுள்ளது. இதனை விஜய் சரியாக பயன்படுத்தி வேட்பாளரை களமிறக்கி இருக்கலாம் எனபதே தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. அதன் மூலம் நாதகவிற்கு பதிலாக திமுக Vs தவெக என ஒட்டுமொத்த தேர்தல் களமுமே மாறியிடுக்கக் கூடும், இதனால் கட்சி கடைக்கோடி மக்களையும் சென்று சேர்ந்திருக்கும் என கருதுகின்றனர். 2026 தேர்தலை உதயநிதி Vs விஜய் என கொண்டு செல்ல விரும்பும் தவெகவிற்கு, இது ஒரு நல்ல ட்ரையலாக இருந்து இருக்கும். இத்தகைய நல்ல வாய்ப்பை விஜய் கோட்டைவிட்டுவிட்டாரே என தவெக நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விஜய்க்கு சாதகமா களம்?
திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதே சீமானின் இலக்காக உள்ளது. ஆனால், அதே ஈரோடு மண்ணில் பிறந்து தமிழகத்தின் முற்போக்கு சித்தாந்தத்தின் தந்தையாக கருதப்படும், பெரியார் பற்றி தான் அண்மைக்காலமாக சீமான் மிகவும் மோசமாக பேசி வருகிறார். இதனால், கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை நாதகவின் வாக்கு சதவிகிதம் குறையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் விஜயின் தவெக ஈரோடு கிழக்கில் போட்டியிட்டு இருந்தால், திமுக எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாக நாதக பக்கமிருந்து தங்கள் பக்கம் இழுத்து இருக்கலாம். கணிசமான வாக்குகளை பெற்று இருந்தாலும், அது களத்தில் விஜயின் தவெகவின் பலத்தை அறிய நல்ல வாய்ப்பாக இருந்து இருக்கும்.