இஸ்ரேல் நாட்டின் வெஸ்ட் பெங்க் பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலில் பத்திரிகையாளர் ஷீரின் அபு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல் அந்த பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பத்திரிகையாளர் மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 2000ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல்-பாலஸ்தீனம் தொடர்பான பிரச்னையை இந்த பத்திரிகையாளர் செய்தி சேகரித்து வந்துள்ளார்.
வரலாற்று பின்னணி:
இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைக்கு பிறகு உலகில் மிகவும் தீர்க்க முடியாத இருநாட்டு பிரச்னை என்றால் அது இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் தான். இந்தப் பகுதியில் 19ஆவது நூற்றாண்டு முதல் யூதர்களுக்கும் அரபுகளுக்கும் சண்டை இருந்து கொண்டே வந்துள்ளது. இவை 20ஆம் நூற்றாண்டில் மிகவும் தீவிரம் அடைந்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஐநா சபை உருவான பிறகு 1947ஆம் ஆண்டு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு வழி கூறப்பட்டது. அதன்படி பிரிட்டிஷ் காலனியாக இருந்த இப்பகுதியை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு இஸ்ரேல்- அரபு மக்களுக்கு பாலஸ்தீனம் என இருநாடுகளாக பிரிக்க ஐநா சபை யோசனை வழங்கியது.
இதன்பின்னர் மீண்டும் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல், ஜார்டன்,சிரீயா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே 6 நாள் போர் நடைபெற்றது. இந்தப் போரில் இஸ்ரேல் நாட்டு படைகள் ஜார்டன் இடமிருந்து வேஸ்ட் பாங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதியையும், எகிப்து இடமிருந்து காசா பகுதியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதன்பின்னரும் ஜெருசலேம் பகுதிக்காகவும் அரபு மக்களை ஏற்றுக் கொள்ளாமலும் இஸ்ரேல் அரசு தொடர்ந்து சண்டையிட்டு வந்தது. 1993ஆம் ஆண்டு ஆஸ்லோ ஒப்பந்தத்தின்படி நீண்ட நாட்கள் சண்டைக்கு பிறகு பாலஸ்தீனியர்கள் காசா பகுதி மற்றும் வேஸ்ட் பாங்க் பகுதியில் வசிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டது.
எனினும் பாலஸ்தீனத்தில் முக்கிய கட்சியான ஹமாஸ் படைக்கும் இஸ்ரேல் படைக்கும் எப்போதும் தாக்குதல் நடைபெற்று வந்தது. 2013ஆம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் அமைதி பேச்சு வார்த்தையை மீண்டும் அமெரிக்க முன்னேடுத்தது. அப்போது பாலஸ்தீனத்தில் ஆட்சி செய்து வந்த ஃபாதா கட்சி ஹமாஸ் கட்சியுடன் கூட்டாக ஆட்சியில் அமர்ந்தது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஏனென்றால் 1997ஆம் ஆண்டு ஹமாஸ் படைகளை சர்வதேச தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்க அறிவித்திருந்தது.
இதன்பின்னர் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்னர் மீண்டும் ஹமாஸ்-இஸ்ரேல் படைகள் இடையே போர் மூண்டது. ஹமாஸ் படைகள் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் நாட்டின் மீது ஏவியது. இதற்கு இஸ்ரேல் படைகளும் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதலில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் படையின் கொல்லப்பட்டனர். அத்துடன் 4 மாதங்களாக நீடித்த இந்தப் போர் எகிப்து தலையிட்டதால் கடைசியில் முடிவிற்கு வந்தது. அதன்பின்னரும் தொடர்ந்து அவ்வப்போது சிறிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தது. இதன்காரணமாக அவ்வப்போது இஸ்ரேல் நாட்டு படைகள் வேஸ்ட் பாங்க் மற்றும் காசா பகுதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்