உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கி மூச்சு திணறும் சமயத்தில், புதிய புதிய வேரியன்ட்கள் வந்து மேலும் மேலும் அச்சுறுத்தும் சமயத்தில் தான் டிசம்பர் மாத கடைசி வாரமும் வந்துள்ளது. உலக கிறிஸ்தவர்களின் கொண்டாட்ட மதமான இதனை கொண்டாடுவதற்கென்றே இங்கிலாந்து பிரதமர் கொரோனா நெருப்பு போல் பரவும் நிலையிலும் ஊரடங்கு அறிவிக்காமல் இருக்கிறார். ஆனால் பல நாடுகள் கொரோனா அலைகளில் சிக்கி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆறாவது அலையை எதிர்நோக்கியிருக்கும் ஸ்பெயினில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற போதிலும் கொரோனா பாதிப்பின் விகிதமும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஸ்பெயின் நாட்டில் நேற்று மட்டும் 27 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஸ்பெயின் அரசாங்கம் தெருக்களில் முககவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில் கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் சூழலை சந்தித்து வரும் நிலையில் அங்குள்ள குழந்தைகள் பலர் கோரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. சமீபத்தில் தான் 5 முதல் 11 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனை தனிமைப்படுத்துதலில் எண்ணற்ற குழந்தைகள் இருப்துகொண்டு உள்ளார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்பெயினின் தீயணைப்பு துறையினர் ஒரு வேலையை செய்துள்ளனர்.
வீட்டில் ஆடி பாடி திரிந்த குழந்தைகள் திடீரென்று தங்களது பெற்றோரை காணாமல் மிகவும் வருந்துவார்கள். ஆனால் சாதாரண நாட்கள் என்றால் ஓரிரு வாரத்தில் வீடு திரும்பிவிடலாம் என்று தேற்றலாம். ஆனால் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை காலமான கிறிஸ்துமஸ் காலத்தில் கொண்டாட வேண்டிய நேரங்களை தனிமையில் கழிக்கும் சூழ்நிலை தீயணைப்பு துறையினரை வருத்தியிருக்கிறது. எனவே மருத்துவமனை மாடியில் இருந்து சாண்டா க்ளாஸ் வேடமிட்டு கயிறு கட்டி ஜன்னல் வழி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்திய காட்சி நெகிழச்செய்கிறது. உள்ளே இருந்து குழந்தைகள் மிகவும் ஆரவாரத்துடன் கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவேற்கின்றனர். இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. இந்த சம்பவம் பார்சிலோனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.