இஸ்லாமிய மதத்தை மிக தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் ஒன்று ஈரான். இங்கு 9 வயது பெண்கள் முதல் அனைத்து பெண்களும் இஸ்லாமிய மத அடிப்படைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  1979 நாட்டில் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் பெண்கள் அனைவரும் வெளியே செல்லும்போது தலை முதல் கழுத்துவரை மூடி இருக்க வேண்டும். அப்படி அணியவில்லை எனில் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டும் வந்தது. 


இந்த சூழலில், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற பெண் கடந்த செவ்வாய்கிழமை (13-ம் தேதி) தனது குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை காவல்துறை பிரிவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.


அந்த நேரத்தில், நெறிமுறை காவல்துறை பிரிவு மாஷா அமினியின் குடும்பத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டுள்ளது. அப்போது அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி அவரை கைது செய்து காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.


காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். 






இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த பெண்கள் மாஷாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் இணைந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தாங்கள் அணிதிருந்த ஹிஜாப்பை கழட்டி வீசி “சர்வாதிகாரிக்கு மரணம்” என கோஷமிட்டனர். இதன் காரணமாக பல பகுதிகளில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். 


ஈரானிய பத்திரிகையாளரும் ஆர்வலருமான மசிஹ் அலினெஜாத், தனது சமூக ஊடக கணக்கில் போராட்டங்களின் காட்சிகளைப் பகிர்ந்துகொண்டு எழுதினார், “ஈரான்-சகேஸ் பெண்கள் 22 வயது பெண் மஹ்சா அமினி ஹிஜாப் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் தலையில் இருந்த ஹிஜாப் கழற்றி கோஷமிட்டனர். சர்வாதிகாரிக்கு மரணம்! ஈரானில் ஹிஜாபை அகற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும். உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றுமையைக் காட்டுமாறு நாங்கள் அழைக்கிறோம்.
இதுதான் உண்மையான ஈரான், ஈரானின் சக்வேஸில் பாதுகாப்புப் படையினர் மஹ்சா_அமினியின் அடக்கத்தை தொடர்ந்து அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். முதலில் ஹிஜாப் போலிசார் 22 வயது சிறுமியைக் கொன்றனர், இப்போது துக்கப்படுபவர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.