அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், நாங்கள் நிறுத்துகிறோம் என்பது போல், இஸ்ரேல் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே, தங்களது பதில் தாக்குதல்களை நிறுத்த முடியும் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ள என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

போர் நிறுத்தம் குறித்து ஈரான் கூறியுள்ளது என்ன.?

நேற்று நள்ளிரவில், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. அதில், குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 200 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி, தங்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார். மேலும், தற்போது தாங்கள் நடத்திவரும் தாக்குதல்கள் வெறும் தற்காப்புக்காக மட்டுமே என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அதோடு, இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளுடன் பிரச்னைகளை வளர்க்க ஈரான் விரும்பவில்லை என்றும், நிர்பந்தத்தாலேயே அவ்வாறு நடப்பதாக ஆரக்சி கூறியுள்ளார்.

“போரை விரிவுபடுத்த முயல்கிறது இஸ்ரேல்“

மேலும், தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மிகவும் ஆபத்தான செயல் என்றும், போரை விரிவுபடுத்தும் முயற்சியாகவே இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆரக்சி.

இந்த மோதலை, பாரசீக வளைகுடாவிற்கு இழுப்பது ஒரு மூலோபாய தவறு என்றும், இஸ்ரேலின் நோக்கம், ஈரானியை எல்லைக்கு அப்பால் போரை இழுப்பதுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைப்பதன் மூலம், அவர்கள் சர்வதேச சட்டத்தில் ஒரு புதிய சிகப்புக் கோட்டை தாண்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையை நிறுத்த முயற்சி“

அதோடு, தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்றுவரும் அணுசக்தி குறித்த பேச்சுவாத்தையை நாசமாக்கவே இஸ்ரேல் இவ்வாறு செய்வதாகவும் ஆரக்சி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவுடன் இன்று நடைபெற இருந்த 6-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது, ஈரான் ஒரு முன்மொழிவை வழங்க இருந்ததாகவும், இஸ்ரேலின் தாக்குதலால், அந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாகவும் ஆரக்சி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஈரான் - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதை விரும்பாததாலேயே, வெள்ளிக் கிழமையன்று இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதாக ஆரக்சி குறிப்பிட்டுள்ளார்.

“இஸ்ரேலுக்கு உதவுகிறது அமெரிக்கா“

மேலும், இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலுக்கு அமெரிக்க படைகள் உதவியதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ள ஆரக்சி, வாஷிங்டன் பச்சைக் கொடி காட்டாமல் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலின் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று அமெரிக்கா கூறுவதை தாங்கள் நம்பவில்லை என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் இவ்வாறு கூறியுள்ள நிலையில், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமா.? அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதற்கான விடை, வரும் நாட்களில் தான் தெரியவரும்.