ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அம்மையங்கள் கடும் சேதமடைந்ததாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம், யூரேனிய செறிவூட்டலை மீண்டும் மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியாக பதிலளித்த ட்ரம்ப் தேவைப்பாட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவாக பார்க்கலாம்.

Continues below advertisement

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியது என்ன.?

அமெரிக்காவின் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஜூன் 22-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவுப்படி, 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட ஏவகணைத் தாக்குதலில், ஈரானின் அணுசக்தி மையங்கள் சேதமடைந்த நிலையில், யூரேனிய செறிவூட்டல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில், அணுசக்தி மையங்களில் ஏற்பட்டுள்ள கடும் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாக கூறிய அரக்சி, அவை அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

“யூரேனிய செறிவூட்டலை நிறுத்த மாட்டோம்“

மேலும், வான்வழித் தாக்குதலுக்குப்பின் யூரேனிய செறிவூட்டல் பணியை தொடர முடியவில்லை என்றும், அதே வேளையில், அமைதியான பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தங்கள் அணுசக்திக் கொள்கையை ஈரான் கைவிடாது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் அரக்சி.

கடும் சேதங்களால் தற்போது யூரேனிய செறிவூட்டல் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதை நிறுத்த மாட்டோம் என்று கூறியுள்ள அரக்சி, அது தங்கள் நாட்டு விஞ்ஞானிகளின் சாதனை என்றும் தங்கள் தேசத்தின் பெருமை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில், உள்நாட்டு தேவைக்கான யூரேனிய செறிவூட்டலை நிறுத்துமாறு கோரும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என அரக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆனால், நாங்கள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக் கூடாது என்பதே அவர்களது நோக்கமாக இருந்தால், அதை ஒப்புக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால், ஈரானின் உரிமையான யூரேனிய செறிவூட்டலையே நிறுத்துவது அவர்களது நோக்கமாக இருந்தால், ஒப்பந்தம் ஏற்படுவது கஷ்டம்தான் என்றும் அரக்சி கூறியுள்ளார்.

அணுசக்தி மையங்கள் சேதமடைந்தாலும், தங்களிடம் தொழில்நுட்ப அறிவு உள்ளதாகவும், கட்டிடங்கள், எந்திரங்கள் எல்லாவற்றையும் மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள அரக்சி, தேவைப்பட்டல் யூரேனிய செறிவூட்டலை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.

அரக்சியின் கூற்றுக்கு உடனடியாக பதிலளித்த ட்ரம்ப்

அரக்சியின் கூற்றுக்கு உடனடியாக பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஆம், நான் சொன்னது போலவே, அவர்களது அணுசக்தி மையங்கள் சேதமடைந்துள்ளன என்றும், தேவைப்பட்டால் நாங்களும் மீண்டும் தாக்குதலை நடத்துவோம்“ என்று கூறியுள்ளார். சேதம் குறித்து தான் ஏற்கனவே கூறியது தற்போது உண்மையாகியுள்ளது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம், ஈரான் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஆனால் மறுபுறம், அவர்கள் கூறியது போல், அமெரிக்காவின் நோக்கம், செறிவூட்டலை நிறுத்துவதா, அல்லது அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதா என தெரியவில்லை. ட்ரம்ப் பேசுவதையெல்லாம் பார்த்தால், ஈரான் யூரேனிய செறிவூட்டலையே மேற்கொள்ளக் கூடாது என்பதாகத் தான் இருக்கிறது.

எப்படியும் ஈரான் அதற்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அப்படியானால், இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஓப்பந்தம் கையெழுத்தாவது எப்படி.?