இழப்புகளையும் சேதங்களையும் தவிர்க்க இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனெனி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் நிதி, ஆயுத உதவிகளைச் செய்து வந்தது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனி ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவர் ஹஸ்ஸன் நஸ்ரல்லாவையும் இஸ்ரேல் படுகொலை செய்தது. 


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் அக்டோபர் 1ஆம் தேதி நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்னெச்சரிக்கை செய்த நிலையில், சேதாரம் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் சூளுரைத்தது. 


இஸ்ரேல் மீண்டும் ஹிஸ்புல்லா மீது தனது தாக்குதலைத் தொடங்கி உள்ளது. லெபனானின் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் ஹஸ்ஸன் நஸ்ரல்லாவின் சகோதரர் ஹஷெம் சைஃபுதீன் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


மொசல்லா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை


இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள மொசல்லா மசூதிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பெரும் திரளான கூட்டத்தினர் வந்திருந்தனர். அவர்கள் கையில் காமெனெனி புகைப்படம் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருந்தார். அவர்களுடன் ஹிஸ்புல்லாவின் பச்சை மற்றும் மஞ்சள் கொடியும் பாலஸ்தீனக் கொடியும் இருப்பதைக் காண முடிந்தது.


தொழுகைக்குப் பிறகு, அயத்துல்லா அலி காமெனெனி பெர்ஷிய மொழியில் உரையாற்றினார். முஸ்லிம்களின் ஒற்றுமையை வலியுறுத்திய அவர், குரான் கொள்கைகளைப் பின்பற்றி வாழ அறிவுறுத்தினார். ஈரானின் எதிரிகள் அனைவரும் பாலஸ்தீன நாட்டின் எதிரிகள். அதேபோல லெபனான், எகிப்து, ஏமன், சிரியா மற்றும் பிற முஸ்லிம் நாடுகளின் எதிரிகள் ஆவர்.


அனைத்து முஸ்லிம்களுக்கும் துன்பத்தை விளைவிப்பதே


பிரிவினையையும், தேசத் துரோகத்தையும் விதைத்து, அனைத்து முஸ்லிம்களுக்கும் துன்பத்தை விளைவிப்பதே நமது எதிரியின் கொள்கைகளாகும் என்று காமனெனி தெரிவித்தர்.


இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் கொடுத்த பதிலடி தாக்குதல் முற்றிலும் சரியானது. இது மிகவும் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே. இஸ்ரேலை காட்டேரிகளின் ஆட்சி எனவும் வெறிநாய்கள் என அமெரிக்காவையும் காமனெனி சுட்டினார்.


இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்


இழப்புகளையும் சேதங்களையும் தவிர்க்க இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் என்றுமே தயங்கவோ, தள்ளிப் போடவோ செய்யாது. ஒவ்வொரு நாடும் அதன் மக்களும் பொது எதிரியை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் காமனெனி தெரிவித்தார்.