இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், முன்னதாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்கதல் நடத்தியது. அதன் பிறகு தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல நாட்களாக மறைந்திருந்ததாக கூறப்பட்ட ஈரான் தலைவர் காமேனி, முதன் முறையாக நேற்று பேசியுள்ளார். அதில், அமெரிக்காவை முகத்திலேயே அறைந்ததாக அவர் கூறியுள்ளார். அவரது பதிவுகளின் முழு விவரங்களை தற்போது காணலாம்.
“அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம்“
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், காமேனியை கொல்வது போன்ற செய்திகளை பரவ விட்டன. அதனால், தகவல் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டு, பதுங்கு குழியில் காமேனி மறைந்திருந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், பல நாட்களுக்குப் பின் நேற்று முதன் முறையாக பேசியுள்ள ஈரான் தலைவர் காமேனி, தனது எக்ஸ் தளத்திலும் வரிசையாக பதிவுகளை போட்டுள்ளார். அதில், இஸ்ரேல் மீதான போரில் வெற்றி பெற்றதற்காக தங்கள் நாட்டினருக்கே வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சலசலப்புகளுக்கும், கூற்றுகளுக்கும் இடையே, ஈரானின் தாக்குதலால் இஸ்ரேல் நசுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அமெரிக்க நிலையை தாக்கி வெற்றியடைந்த நம் பிரியமுள்ள ஈரானுக்கு வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.
அதோடு, இஸ்ரேல் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடும் என்று நினைத்ததாலேயே அமெரிக்கா போருக்குள் நுழைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா போரில் நுழைந்திருந்தாலும், அதனால் எதையும் சாதிக்க முடியவில்லை என காமேனி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து போட்டி பதிவில், ஈரான், அமெரிக்காவின் முகத்தில் பெரிய அறை விட்டதாகவும், அல் உதெய்தில் உள்ள அந்நாட்டின் முக்கியமான விமானப் படை தளத்தை தாக்கி சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை தங்களால் அணுக முடியும் என்பதுதான் நிதர்சனமாக உண்மை என்றும், தேவைப்படும் போது அங்கு தாக்குதல்களை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம் என்றும் காமேனி அமெரிக்காவை மிரட்டுவது போல் கூறியுள்ளார்.
எதிர்காலத்திலும் இதே போன்ற தாக்குதல்களை நடத்த முடியும் என்று கூறியுள்ள அவர், மீண்டும் அமெரிக்கா தாக்கினால், அதற்கு அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி மையங்கள் அழிந்துவிட்டதாக ட்ரம்ப் கூறிய நிலையில் ஈரான் அதை மறுத்து வந்தது. பின்னர், நேற்று சேதங்கள் ஏற்பட்டதாக ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், காமேனியின் இந்த பதிவுகள், ஈரான் இன்னும் எதையும் நிறுத்தவில்லை என்றே தோன்றுகிறது. அதனால், போர் நிறுத்தம் எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால், காமேனியின் பதிவுகளால் ட்ரம்ப் எரிச்சலடையும் பட்சத்தில், மீண்டும் தாக்குதல்கள் நடததப்படலாம். அப்படி நிகழ்ந்தால், இது இன்னும் மிகப் பெரிய போராக மாறிவிடும் சூழல் ஏற்படும்.