Iran Israel USA Conflict: கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது, ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்:

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான சமூகவலைதளப் பதிவில், “அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்ததம் (இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவை முடிவுக்கு வந்து தங்கள் இறுதிப் பணிகளை முடித்த சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு!) 12 மணி நேரத்திற்குள் நடைபெறும் என்று முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளன. அப்போது போர் முடிந்ததாகக் கருதப்படும்! அதிகாரப்பூர்வமாக, ஈரான் போர் நிறுத்தத்தை தொடங்கும், 12வது மணி நேரத்தில், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை ஐத் தொடங்கும், 24வது மணி நேரத்தில், 12வது நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகம் வரவேற்கும்.

உலகை கடவுள் ஆசிர்வதிப்பாராக..

ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். எல்லாம் அது நடக்க வேண்டும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் புத்திசாலித்தனத்தைப் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன், அதை "12 நாள் போர்" என்று அழைக்க வேண்டும். இது பல வருடங்களாக நீடித்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக்கூடிய ஒரு போர், ஆனால் அது நடக்கவில்லை, ஒருபோதும் அழியாது! கடவுள் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக, கடவுள் ஈரானை ஆசீர்வதிப்பாராக, கடவுள் மத்திய கிழக்கை ஆசீர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக, கடவுள் உலகை ஆசீர்வதிப்பாராக” என தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

போர் ஓய்ந்ததா?

ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பின்படி, போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று மாலை 3.30 மணியளவில் ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர் பதற்றமும் தணியும். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடி ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் பெற்றதாகவும், ஈரான் தரப்பினரிடம் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்திய அமைதிக்கான ஒப்பந்தத்தை எட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உச்சகட்ட போர் பதற்றம்:

அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானின் முயற்சியால் தங்கள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக ஈரானும் வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் தான், கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலையில், ஈரானில் உள்ள அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக, நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் மூன்றாம் உலகப்போராக வெடிக்குமோ என்ற பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளை தொடர்ந்து உலக நாடுகளையும் தொற்றிக்கொண்டது. இந்நிலையில் தான் இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 950 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், சுமார் 3 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.