ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினி என்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து, நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

Continues below advertisement


இரண்டு மாத போராட்டத்திற்கு பிறகு உடை கட்டுப்பாட்டு விதியை கண்காணிக்கும் அறநெறி காவல்துறையை ஈரான் அரசு கலைத்தது. பெண்கள் தலைமையில் நடந்த அற வழி போராட்டத்தை கலவரமாக ஈரான் அரசு முத்திரை குத்தி வந்தது. 


குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி அவரை கைது செய்து அறநெறி காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.


இளம்பெண் உயிரிழப்பு:


காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார்.


காஷ்ட்-இ எர்ஷாத் என்றும் கைடன்ஸ் பாட்ரோல் என்றும் அறநெறி காவல்துறை அழைக்கப்படுகிறது. அடக்கத்தையும் ஹிஜாப் கலாச்சாரத்தை பரப்புவதற்காக அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் காலத்தில் இது நிறுவப்பட்டது.


முன்னதாக, ஈரான் பள்ளி மாணவிகள் போராட்ட களத்திற்கு வந்தது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.  நெறிமுறை காவல்துறையின் கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து, தங்கள் ஹிஜாப்களை அகற்றி, ஆங்காங்கே பேரணிகளை நடத்தினர் பள்ளி மாணவிகள்.


தெஹ்ரானின் புகழ்பெற்ற ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கார் பார்கிங்கில் மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கலவர காவல்துறை அவர்களை மடக்கி பிடித்து அங்கிருந்து இழுத்து சென்றனர்.


போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் மாணவிகள், தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கழட்டி, அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.


ஈரானில் அட்டூழியம்:


இந்நிலையில், ஹிஜாப் அணியாத பெண்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களில் கேமராக்களை நிறுவி வருகிறது ஈரான் காவல்துறை. அடையாளம் கண்டு ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. ஈரானில் ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஹிஜாப் அணியாத பெண்களை அடையாளம் கண்ட பிறகு, அவர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் சட்டத்தை மீறினால் என்ன நடக்கும் என்பது குறுஞ்செய்தி வாயிலாக பெண்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


மேலும் படிக்க: Crime: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... டெலிவரி செய்யும் நபர் கைது!