அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள கால அவகாசம் கொடுப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அமெரிக்கா உடன் மீண்டும் போர் தொடங்கினால், பல ஆச்சர்யங்கள் காத்திருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்பாஸ் அரக்சி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் போர் வெடிக்கும் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அதற்கு ஏற்றார்போல் பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் முடங்கியுள்ளது. இதற்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இதனிடையே, ஈரான் மீது மீண்டும் தாக்குதலை தொடங்க, அமெரிக்க தரப்பிலும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “ஈரான் மீதான போர் தொடங்கப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகு, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள டஜன் கணக்கான விமானங்களை இழந்துள்ளதை அமெரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
பெரிதும் பேசப்பட்ட F-35 ரக விமானத்தை வீழ்த்திய முதல் படை நமது(ஈரான்) வலிமையான ஆயுதப் படைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் பெற்ற அறிவைக் கொண்டு, மீண்டும் போருக்குத் திரும்பும்போது இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்.“ என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை(CRS) கூறியது என்ன.?
ஈரானில் நடந்த போரின்போது, போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் உட்பட குறைந்தது 42 அமெரிக்க ராணுவ விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. வகைப்பாடு, தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள் மற்றும் காரணத்தை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த இழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று, காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை (CRS) வெளியிட்ட அந்த அறிக்கை கூறியுள்ளது.
மேலும், விமான இழப்புகள் மற்றும் சேதங்களில். 4 F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு F-35A லைட்னிங் II போர் விமானம், ஒரு A-10 தண்டர்போல்ட் II தரைத் தாக்குதல் விமானம், 7 KC-135 ஸ்ட்ராடோடேங்கர் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ஒரு E-3 சென்ட்ரி வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம்(AWACS), 2 MC-130J கமாண்டோ II சிறப்பு நடவடிக்கை விமானங்கள், ஒரு HH-60W ஜாலி கிரீன் II போர் தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர், 24 MQ-9 ரீப்பர் நடுத்தர உயர நீண்ட நேர பறக்கும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஒரு MQ-4C டிரைட்டன் உயர் உயர நீண்ட நேர பறக்கும் ஆளில்லா விமானம் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட தாக்குதலை கடைசி நிமிடத்தில் நிறுத்திய ட்ரம்ப்
நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மீண்டும் தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு டெஹ்ரானுக்கு “வரையறுக்கப்பட்ட கால அவகாசம்” வழங்க முடிவு செய்துள்ளதாக கூறினார். “இரண்டு அல்லது மூன்று நாட்கள், ஒருவேளை வெள்ளி, சனி, ஞாயிறு, அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் இருக்கலாம்,” என்றும் ட்ரம்ப்பை மேற்கோள் காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டது.
வளைகுடா நாடுகளின் அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகு, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்கும் திட்டத்தை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். அமெரிக்க படைகள் நடவடிக்கைகளை தொடங்க முழுமையாகத் தயாராக இருக்கின்றன என்று அவர் கூறியிருந்தபோதிலும், கடைசி நிமிடத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இப்படி ஒரு எச்சரிக்கையை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
