ஈரானில் ஹிஜாப்பை அணியவில்லை எனக் கூறி மாஷா அமினி என்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். அவரை உடை கட்டுப்பாட்டு விதியை கண்காணிக்கும் அறநெறி காவல்துறை அடித்து கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, உடை கட்டுப்பாடுக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடிகை கைது:
மூன்று மாத போராட்டத்திற்கு பிறகு உடை கட்டுப்பாட்டு விதியை கண்காணிக்கும் அறநெறி காவல்துறையை ஈரான் அரசு கலைத்தது. இந்நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முக்கிய நடிகை ஈரான் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, ஆஸ்கர் விருதை வென்ற "The Salesman" படத்தில் நடித்து வெகுவாக பாரட்டினை பெற்ற நடிகை தாரனே அலிதூஸ்டி, தவறான தகவல்களை பகிர்ந்து குழப்பத்தை விளைவித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, அலிதூஸ்டி பதிவிட்ட சமூக வலைதள பதிவிற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதே நாளில்தான், போராட்டத்தை நடத்தியதாக மொஹ்சென் சேகாரி என்ற இளைஞர் முதல்முறையாக தூக்கிலிடப்பட்டார்.
ஹிஜாப் போராட்டம்:
அந்த பதிவில், "உங்களின் மௌனம் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையாளரின் ஆதரவை சுட்டி காட்டுகிறது. இந்த ரத்தக்களரியை பார்த்தும் நடவடிக்கை எடுக்காத அனைத்து சர்வதேச அமைப்புகளும் மனித குலத்திற்கு அவமானம்" என பதிவிட்டிருந்தார்.
இளம் வயதில் இருந்தே, ஈரானிய சினிமாவில் தாரனே அலிதூஸ்டி முக்கிய இடத்தில் உள்ளார். அவர் நடித்த "Leila's Brothers" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த 22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி அவரை கைது செய்து அறநெறி காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றும் மாஷா பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார்.
ஈரானில் போராட்டம்:
முன்னதாக, ஈரான் பள்ளி மாணவிகள் போராட்ட களத்திற்கு வந்தது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. நெறிமுறை காவல்துறையின் கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து, தங்கள் ஹிஜாப்களை அகற்றி, ஆங்காங்கே பேரணிகளை நடத்தினர் பள்ளி மாணவிகள்.
தெஹ்ரானின் புகழ்பெற்ற ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கார் பார்கிங்கில் மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்தினர்.