சீனாவில் இருந்து பரவ தொடங்கி உலகையே அச்சுறுத்திய கொரோனா பாதிப்பிலிருந்து, மெல்ல மெல்ல உலக நாடுகள் இப்போது தான் மீண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியாமல் இன்றளவும் பல நாடுகள் தவித்து வருகின்றன.  அந்த வகையில் கொரோனா தொற்று அளித்த மோசமான அனுபவத்தின் வடுக்கள் மறைவதற்கு முன்பாகவே, உலக நாடுகளில் மீண்டுமொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:


அந்த அறிக்கையின்படி, பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் காலரா பரவல் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் காலரா பரவலானது, கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நடப்பாண்டில் காலரா நோயானது, 30 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.  பெரிய அளவிலான வெள்ளம், முன்னெப்போதும் இல்லாத வகையிலான பருவமழை மற்றும் தொடர்ச்சியான சூறாவளி புயல்கள் ஆகியவற்றுடன் இந்த தொற்றும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஹைதி, லெபனான், மாளவி மற்றும் சிரியா போன்ற நாடுகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு உள்ளன. பாகிஸ்தானில் நடப்பு கோடை கால பெருவெள்ளத்திற்கு பின்பு, 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


”லா நினா” பருவகால பாதிப்பு:


உலகளவில் நிலவும் தற்போதைய சூழல் வரும் 2023-ம் ஆண்டில் அதிவேகத்தில் மாற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. காரணம்,  தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக லா நினா என்ற பருவகால பாதிப்பானது தொடரும் என வானியல் ஆய்வு மையத்தினர் கணித்து உள்ளனர். அதனால், 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் என்ன நிலை காணப்பட்டதோ, அதே நிலையை மீண்டும் நாம் காணக் கூடும்.  லா நினாவுடன் கூடிய இயற்கை பேரிடரால், வறட்சி மற்றும் மழை மற்றும் சூறாவளி புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றவை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில், கிழக்கு மற்றும் தென்பகுதி ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் ஆசிய நாடுகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் எச்சரித்து உள்ளது.


1.43 லட்சம் பேர் உயிரிழப்பு:


கெட்டுப் போன உணவு அல்லது குடிநீர் ஆகியவற்றை எடுத்து கொள்வதனால், பரவ கூடிய இந்த வயிற்றுப்போக்கு பாதிப்புகளால் ஏற்படக் கூடிய காலரா தொற்றானது ஆண்டுக்கு, 40 லட்சம் பேரை பாதிக்கிறது.  இதனால், 21 ஆயிரம் முதல் 1.43 லட்சம் பேர் வரை உலகம் முழுவதும் உயிரிழக்கின்றனர் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. லேசான அறிகுறிகளே காணப்பட்டாலும், உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது, உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஆபத்தானதாக உள்ள காலரா:


இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்று வியாதிகளுக்கான குழு தலைவர் பிலிப் பார்போசா ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  நடப்பு சூழ்நிலையானது முற்றிலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் வேறுபட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் நாம் பார்க்காத வகையில், காலரா பரவல் அதிகம் மட்டுமின்றி, அதிக கொடியதாகவும் உள்ளது. காலரா பரவல் மற்றும் மரண விகிதங்கள் பல ஆண்டுகளாக பெருமளவில் குறைந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் காலரா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. உலக அளவில் காலரா பரவுவதற்கு, அனைத்து வகையான காரணிகளும் அதன் பங்கிற்கு ஏற்ப பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளன. பருவநிலை மாற்றம் எதிரொலியாக சர்வதேச அளவில் காலரா பரவல் அதிகரித்து காணப்படுகிறது என பார்போசா கூறினார்.


தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை:


காலரா தடுப்பூசிகளின் உலகளாவிய கையிருப்பு தற்போது காலியாக உள்ளது அல்லது மிகவும் குறைவாக உள்ளது என எச்சரித்துள்ளார். பல நாடுகள் தங்களிடம் தடுப்பூசிகள் கோரி வரும் நிலையில், எங்களிடம் கையிருப்பு இல்லை. இது மோசமான சூழல் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.