அரபிக் கடலில் ஷாஹின் புயல் உருவானது. இதன் காரணமாக ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் கன மழை பெய்து வருகிறது. இந்தப் புயலால் ஓமனில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கனமழை மற்றும் பலத்த காற்றால் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதேபோல ஈரானிலும் புயலால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. புயல் பாதிப்புகளுக்கான மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஷாஹின் புயல்  இன்று கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.






இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமனில் புயல்கள் புதிது கிடையாது. ஆனால், பலத்த காற்றுடன் ஓமனில் புயல்கள் கரையை கடப்பது மிகவும் அரிது. ஷாஹின் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 120 கி.மீ முதல் 150 கி.மீ வேகத்துக்கு பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. கடந்த 130 ஆண்டுகளில் ஓமனில் 6 புயல்கள் கரையை கடந்துள்ளன. புயல்களில் எப்போது என்ன மாயாஜாலம் வேண்டுமானால் நடக்கும். இதை பார்க்கும்போது, ஷாஹின் புயல் பலவீனமதாக தெரியவில்லை. 150-250 மில்லி மீட்டர் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.






புயல் கடப்பதாக எதிர்பார்க்கப்படும் சஹாம் பகுதியில் மிக மிக கன மழையை எதிர்பார்க்கலாம். புயல் துபாயின் தெற்கு பகுதியை நோக்கிதான் நகர்கிறது. எனவே, திங்கள்கிழமை பகல் நேரத்தில் துபாயில் லேசான மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், சென்னை - டெல்லி ஆட்டம் தொடங்கும்போது மழை பொழிவு இருக்காது.” என்று கூறியுள்ளார்.