10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் விழுந்த ஐபோன் நல்ல இயங்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஆற்றில் விழுந்த ஐஃபோன்:


இங்கிலாந்தின் க்ளூசெஸ்டரைச் சேர்ந்த மிக்கி என்ற நபர் வே ஆற்றில் பயணம் செய்தபோது ஒரு ஐ போனை கண்டு எடுத்ததாகவும், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று காயவைத்து, சார்ஜ் போட்டபின் ஆன் செய்தபோது அது ஆன் ஆனதாகவும், தேதி ஆகஸ்ட் 13 என்று காட்டியதாகவும், அதில் ஒரு தம்பதியின் புகைப்படம் இருப்பதையும் குறிப்பிட்டு அந்த ஐபோன் யாருடையதாக இருக்கும்? அந்த போனை உரியவரிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள் என்று கூறி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவு 4,300 ஷேர்களை தாண்டிச் செல்ல ஒருவழியாக அந்த ஃபோனுக்கு சொந்தக்காரர் கண்டுபிடிக்கப்பட்டார்.




ஐஃபோன் தொலைந்த கதை:


ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஓவைன் டாவிஸ் என்ற நபர் தான் அந்த ஃபோனுக்குச் சொந்தக்காரர் என்பது தெரிய வந்ததையடுத்து ஐஃபோன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஃபோன் தொலைந்தது பற்றி டாவிஸ் கூறும்போது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தானும் தனது முன்னாள் மனைவி ஃபியோனா கார்ட்னர் இருவரும் ஆற்றில் செல்லும்போது தனது பின் பாக்கெட்டில் இருந்த அந்த ஐ ஃபோன் ஆற்றுக்குள் தவறி விழுந்ததாகவும், அது அவ்வளவு தான் அது திரும்ப கிடைக்காது என்று நினைத்து வீட்டுக்கு திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார். அதேபோல தனது ஃபோனை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க மிக்கி எடுத்த முயற்சிகளைப் பார்த்து வியந்து போயுள்ளேன் என்று அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். 




ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்ட கதை:


இதுபற்றி கூறியுள்ள மிக்கி, தனது குடும்பத்தினருடன் படகு சவாரி செய்துகொண்டிருந்தபோது நீல நிறத்தில் ஏதோ மிதப்பதைப் பார்த்ததாகவும், அது என்ன என்று பார்த்த போது ஒரு ஐபோன் என்று தெரிந்தது. ஒரு ஃபோன் இருக்கிறது என்றால் அதில் முக்கியமான புகைப்படங்கள் எல்லாம் இருக்கும். ஒரு ஃபோன் ஒருவருக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரியும். பலருக்கு பல செண்டிமெண்ட்டான நினைவுகள் அதில் இருக்கும். அதனால் அதனை சுத்தப்படுத்தி, உலரவைத்து சார்ஜ் போட்டபோது ஆச்சரியப்படவைக்கும் வகையில் அது ஆன் ஆனது. அதை உரியவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்தேன். இறுதியில் அந்த ஃபோன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.




ஏன் ஐஃபோன் சிறந்தது?


சாதாரணமாக தண்ணீரில் ஃபோன் விழுந்துவிட்டால் அதை உடனே எடுத்து காயவைத்து பயன்படுத்தினாலே சரியாக இயங்காது எனும்போது, ஆற்றுக்குள் விழுந்து 10 மாதங்கள் கழித்தும் நல்ல நிலையில் இயங்குகிறது என்றால் அது தான் ஐபோனின் தரம் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.