சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்:
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று (18.12.2022) கடைப்பிடிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்தோரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை கவனத்தில் கொள்ள ஆண்டுதோறும் டிசம்பர் 18 அன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் சமமாக மதிக்கப்படுவதையும், மீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகின் விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றம் இருந்தபோதிலும், மக்களின் நடமாட்டம் இன்னும் பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
எண்ணிக்கை அதிகரிப்பு:
பேரழிவுகள், தீவிர வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வன்முறை ஆகியவைகள் காரணமாக மக்கள் தானாக முன்வந்தோ அல்லது முழுவதுமாக விருப்பமின்றி புதிய இடத்திறகு நகர்கின்றனர். நல்ல நாட்கள், நல்ல வாழ்கை முறை ஆகியவைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிழைப்பு, படிப்பு உள்ளிட்டவைகளுக்காக மக்கள் ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.
ஐ.நா.-வின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த ஐம்பது ஆண்டுகளில், சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, 281 மில்லியன் தனிநபர்கள் தங்களுடைய சொந்த நாடுகளை தவிர வேறு நாடுகளில் வசிக்கும் சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்கள் தீர்க்கப்படாமல் இருப்பதை நினைவூட்டுகிறது. மேலும் கொள்கை வகுப்பாளர்கள் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான மற்றும் விரிவான கொள்கைகளை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
வரலாறு:
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (The United Nations General Assembly - UNGA) டிசம்பர் 4, 2000 அன்று டிசம்பர் 18 - ஆம் தேதியை சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக அறிவித்தது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு நாள் நடைமுறைக்கு வந்தது. 1990ம் ஆண்டு இந்த நாளில், அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் இது பற்றி விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் - முக்கியத்துவம்:
அனைத்து புலம்பெயர்ந்தோரின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலன், பணியிட பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யவும், மேம்படுத்தவும் குறிப்பாக அவர்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைத்திடவும் இந்த சிறப்பு நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
பாகுபாடு இல்லாமை மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளின் அவசியம் பற்றிய கருத்துக்களை இந்த நாளில் அனைவரிடமும் கொண்டு சேர்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அபாயங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை பற்றி விவாதிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
இந்தாண்டு கருப்பொருள்:
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் 2022 -இன் கருப்பொருள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், உலக சுகாதார அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் ஆரோக்கியம் குறித்த உலக அளவிலான அறிக்கை' விரைவில் வெளியிடப்படும் என்பதை குறிப்பிட்டுள்ளது. புலம்பெயர்ந்தோருக்கான சுகாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோரின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய பல்வேறு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.