Indonesia Fire Accident : எரிபொருள் சேமிப்பு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு ஜாகர்த்தாவில் பெர்டமினா என்ற எரிசக்தி சேமிப்பு கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இது மாநில எரிசக்தி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் நேற்று இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கிடங்கு இருக்கும் பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதி உள்ளது. கிடங்கில் ஏற்பட்ட தீ மளமளவென குடியிருப்பு பகுதிக்கு பரவி உள்ளது. இதனால் வீட்டிற்குள் இருந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் வந்தடைந்தனர்.
இதனை அடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியையும் மேற்கொண்டனர். இந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேருக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறை கூறுகையில், ”உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு பிறகு தீ விபத்து ஏற்பட்டது.
ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீ பரவத் தொடங்கியதும் மக்களும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து, ஏரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிக்கி வித்யாவதி கூறியதாவது, "இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நிகழாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த எரிபொருள் நிலையம் 300,000 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதே போன்று 2009ஆம் ஆண்டில் டிப்போவ் என்ற நகரில் நடந்தது. டிப்போவுக்கு அருகில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேபோன்று 2021ஆம் ஆண்டில் ஜாவாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதற்கு பிறகு நேற்று எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.