கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா-சீனா படைகள் இடையே கல்வான் பள்ளதாக்கு பகுதியில் பதட்டமான சூழல் உருவானது. ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவப் படைகளுக்கு இடையே அப்பகுதியில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சீனா தரப்பில் 5 ராணுவ வீரர்கள் மட்டும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

  


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியா நாளிதழ் ஒன்று தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி சீன அரசு சார்பில் வெறும் 5 வீரர்கள் மட்டும் உயிரிழந்தனர் என்று கூறுவதில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீனாவில் இருக்கும் சில தனியார் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி தொடர்பான தகவல்கள் அந்த ஆஸ்திரேலியா நாளிதழுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இந்தியா-சீனா கல்வான் பள்ளதாக்கு எல்லை பிரச்னை தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 




அதன்படி, 2020ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா-சீனா இடையே கல்வான் பள்ளதாக்கு பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. அப்போது இந்தியா தரப்பில் அங்கு ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் சீன தரப்பில் அந்தப் பகுதியில் சில கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இரண்டு தரப்புகளிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு நாட்டின் ராணுவ வீரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. அப்போது சந்தோஷ் பாபு தலைமையிலான இந்தியா ராணுவப் படை வீரர்கள் சீனாவின் கலோனல் ஃபேபூவை தாக்கி சிறை பிடித்ததாக தெரிகிறது. 


அவரை மீட்க சீன படைகள் இந்தியா ராணுவத்தினரிடம் சண்டை இட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் ஒரு சில வீரர்கள் உயிரிழந்ததையடுத்து சீனா படைகள் மீண்டும் அவர்களுடைய பகுதிக்கு திரும்பி செல்ல முடிவு எடுத்துள்ளது. அப்போது சில வீரர்கள் பங்காங் சோ ஏரியில் குதித்து தப்பி செல்ல முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இந்த சண்டையில் சீன தரப்பில் சுமார் 38 ராணுவ வீரர்கள் வரை உயிரிழந்துள்ளதாக அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என ஆஸ்திரேலியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஜூன் மாத சம்பவத்திற்கு பிறகு இந்தியா-சீன எல்லையில் இரு நாட்டு வீரர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 50-60 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்தியா-சீனா எல்லை பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: எல்லாம் விநோதம்: உடல் எல்லாம் தோடு...தோலை முடிந்தால் தேடு... இப்படியும் ஒரு மனிதர்!