பசியால் அழுத 6 மாத குழந்தைக்கு இண்டிகோ விமான நிறுவனம் உணவு கொடுக்க மறுத்ததாக எழுந்த புகார் இணையவாசிகள் இடையே கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
பொதுவாக விமானப் பயணம் என்பது சாமானியர்களுக்கு இன்றளவும் கனவாகவே இருந்தாலும், அதில் பயணிக்கும் பெரும்பாலானோர் ஜன்னலோர இருக்கைகளையே கிடைக்க விரும்புவர். விமானம் புறப்பட்டது முதல், நடுவானில் மேகக் கூட்டங்களுக்கு இடையே செல்வது, தரையிறங்குவது போன்ற செயல்களை காண விரும்புவது என சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் அந்த ஜன்னலோர இருக்கைப் பயணத்தை ரசிப்பார்கள். அதேபோல் விமானத்தில் வழங்கப்படும் உணவு, மது போன்றவைகளை விரும்பும் தனிக் கூட்டமும் உண்டு.
இதனிடையே இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் எனது 6 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணம் மேற்கொண்டேன். பயணத்தின் போது எனது குழந்தை திடீரென பசியால் அழுதது. உடனடியாக விமான ஊழியர்களிடம் குழந்தைக்கு உணவு தருமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு பணம் கொடுக்கவும் தயார் எனவும் கூறினேன்.
ஆனால் விமான ஊழியர்களோ முதலில் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு உணவை தந்து விட்டு தான் பின் மற்றவர்களுக்கு தருவோம் என கூறினர். எனது குழந்தை பசியால் அழுவதை அவர்கள் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் பலரும் இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் பயணியின் இந்த குற்றச்சாட்டுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ட்விட்டர் பதிவில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதுடன், இந்த விஷயத்தை பரிசீலிப்பதாகவும் உறுதியளித்தது. ஆனால் சிலர் குழந்தையின் பசியறியாமல் உணவு எடுத்து செல்லாதது தாயின் குற்றம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்