கலவரத்தில் சிக்கி தவிக்கும் சூடானிலில் இருந்து இந்தியர்கள் உள்பட 12 நாடுகளை சேர்ந்த 66 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சவுதி குடிமக்கள் மற்றும் பிற நாட்டவர்களுடன் ஒரு கப்பல் நேற்று ஜித்தாவை சென்றடைந்தது.மோதல் வெடித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சவுதிக்கு வருகை:
சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை பேசினார். சூடானில் இருந்து வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டது குறித்து சவுதி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "சவுதி ராஜ்ஜியம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக, சூடானில் அதன் குடிமக்கள், தூதர்கள் மற்றும் சர்வதேச அதிகாரிகள் உள்பட சகோதர மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு சவுதியில் பாதுகாப்பாக வந்திறங்கியதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு கலவரம்:
ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால், அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.
அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி, ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.
இந்தியர்கள் நிலை:
சூடான் நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான ரேபிட் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் என்ற குழு இன்று ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டது. அந்தக் குழுவானது முதலில் கார்த்தோம் விமான நிலையத்தைக் கைப்பற்றியது. பின்னர் அதிபர் மாளிகையையும் கைப்பற்றியதாக அறிவித்தனர்.
இதனால் சூடான் முழுவதும் கலவரம் மூண்டுள்ளது. ஒருபுறம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நடக்கிறது. இன்னொரு புறம் மக்களும் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். சூடானில் கலவரம் மூண்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்கள்:
இந்தியர்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்கவும். அடுத்த அறிவிப்புகாக காத்திருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,000 இந்தியர்கள், சூடானில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களில் பலர் மும்பையைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஆவர்.
சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை, நேற்றிரவு வரை 80 தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உ சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து மத்திய அரசோடு பேசி வருகிறோம் என்றார்.