MEA Advisory: போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


கொந்தளிப்பான சூழலில் மத்திய கிழக்கு நாடுகள்:


பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. போர் நிறுத்தம் கோரி சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.


காசா போர் தொடங்கி 6 மாதங்கள் ஆன நிலையிலும், அதன் தீவிரம் குறைந்தபாடில்லை. இதற்கிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியா நாட்டு தலைநகரான டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.


ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ ஜெனரலும் ஆறு ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் கூறி வருகிறது. இதுகுறித்து ஈரான் நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறுகையில், "இஸ்ரேலுக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும். இது ஈரான் மண்ணின் மீதான தாக்குதலுக்கு சமம்" என்றார்.


பதற்றத்தை ஏற்படுத்தும் இஸ்ரேல் தாக்குதல்:


ஈரானின் அச்சுறுத்தல் காரணமாக பிராந்தியத்தின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அமைதி காக்கும்படி ரஷியா, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.


இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


தற்போது ஈரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும், அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


அமெரிக்காவும் பிரான்சும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு இதேபோன் அறிவுறுத்தலை வழங்கி இருந்தது. முன்னதாக, ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, சிரியாவில் ஈரான் நாட்டு தூதரக வளாகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கவலை தெரிவித்து கொள்கிறோம்.


மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் வன்முறைகள், உறுதியற்ற தன்மையைத் தூண்டும் செயல்களால் இந்தியா வருத்தமடைந்துள்ளது. சர்வதேச சட்டத்தின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரான செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்திருந்தது.