இந்தியாவைச் சேர்ந்த மைத்ரி மங்கல் என்னும் இளம் பெண் பொறியாளருக்கு நியூயார்க்கில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.6 கோடி ஊதியம் வாங்குகிறார். இவரின் மாத செலவு எவ்வளவு தெரியுமா? இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று வைரல் ஆகி வருகிறது.
பாட்காஸ்டரும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சருமான குஷால் லோதா இதுதொடர்பாக பதிவு ஒன்றை இட்டார். அதில், இந்தியாவைச் சேர்ந்த இளம்பெணும் பொறியாளருமன மைத்ரி மங்கலைப் பேட்டி கண்டிருந்தார்.
அதில், நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்? எவ்வளவு சம்பளம்? எவ்வளவு செலவாகிறது என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மைத்ரி மங்கல் கீழ்க்கண்டவாறு பதில் அளித்து இருந்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’நான் நியூயார்க் நகரத்தில் வாழ்கிறேன். மென்பொருள் பொறியாளராக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இங்கு பொதுவாக பல்வேறு பணிகளுக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ.1.6 கோடி ஊதியமாக அளிக்கப்படுகிறது.
மாதம் 4.2 லட்சம் ரூபாய் செலவு
மாதந்தோறும் சுமார் 5 ஆயிரம் டாலர்களை நான் செலவழிக்கிறேன் (சுமார் 4.2 லட்சம் ரூபாய்). இதில் அபார்ட்மெண்ட் வாடகை மட்டும் 3 ஆயிரம் டாலர்கள். (2.5 லட்சம் ரூபாய்)
அதேபோல வெளியில் சாப்பிடுவது, மளிகை, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு 1000 முதல் 2 ஆயிரம் டாலர்கள் ஆகிறது. (இந்திய மதிப்பில் 85 ஆயிரம் முதல் 1.71 லட்சம் ரூபாய் வரை) அதேபோல போக்குவரத்து செலவுக்கு 100 முதல் 200 டாலர்கள் ஆகின்றன. இது இந்திய மதிப்பில் ரூ.8.5 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை இருக்கும்’’ என்கிறார் மைத்ரி மங்கல்.
’’மாதாமாதம் செலவு மட்டுமே 4.2 லட்சம் ரூபாயா? எங்களில் பலர் ஆண்டு முழுமைக்குமே சேர்த்துக்கூட 4 லட்சம் ரூபாயை சம்பாதிக்க முடியவில்லை’’ என்று நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றாக நியூயார்க் விளங்குவது குறிப்பிடத்தக்கது.