2500 ஆண்டு கால புதிர்:


கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் சமஸ்கிருத அறிஞர்களை குழப்பி வந்த இலக்கணச் சிக்கல் ஒன்றுக்கு  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்றுவரும்  இந்திய மாணவர் ஒருவர் தீர்வு கண்டுள்ளார். மொழியியலின் தந்தையாகக் கருதப்படும் சமஸ்கிருத அறிஞர் பாணினி கற்பித்த விதியை  ‘டிகோட்’ செய்து 27 வயது நிரம்பிய பி ஹெச்டி மாணவரான ரிஷி ராஜ்போபாட் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார்.


‘அஷ்டாத்தியாயீ’ என்று அழைக்கப்படும் பாணினி தோற்றுவித்த இலக்கண முறையில் உள்ள முரண்பட்ட விதிகளுக்கான தீர்வை ரிஷி ராஜ்போபாட் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜ்போபட்டின் இந்தக் கண்டுபிடிப்பால் முதன்முறையாக அறிஞர் பாணினியின் இலக்கணத்தை கணினிகளுக்கு கற்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தான் ஒரு யுரேகா தருணத்தை அனுபவித்ததாக மகிழ்ச்சியுடன் இது குறித்து ராஜ்போபாட் கூறியுள்ள நிலையில், முன்னணி சமஸ்கிருத வல்லுநர்கள் ராஜ்போபாட்டின் இந்தக் கண்டுபிடிப்பை 'புரட்சிகரமானது' எனப் பாராட்டி வருகின்றனர். 


"கடந்த ஒன்பது மாதங்களாக இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சித்த பிறகு எங்கும் தீர்வு கிடைக்காததால் நான் கிட்டத்தட்ட அனைத்தையும் கைவிடத் தயாராக இருந்தேன். எனவே ஒரு மாதம் புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், சமைத்தல், பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றை செய்து வந்தேன்.


 






பின்னர் வெறுப்புடன் நான் மீண்டும் வேலைக்குத் திரும்பினேன்.


கண்டுபிடிப்பு


அப்போது நான் பக்கங்களைப் புரட்டும்போது  எனக்கு இவை புரியத் தொடங்கின,அனைத்தும் அர்த்தமுள்ளதாகத் தொடங்கின. இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் புதிரின் மிக முக்கியமான பகுதியைக் கண்டுபிடித்துள்ளேன்” என தன் கண்டுபிடிப்பு குறித்து ராஜ்போபட் தெரிவித்துள்ளார்.


"பாணினி ஒரு அசாதாரண மனதைக் கொண்டிருந்தார், மேலும் அவர் மனித வரலாற்றில் இணையற்ற ஒரு இயந்திரத்தை உருவாக்கினார். புதிய விதிகளை நாங்கள் கொண்டு வருவோம் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பாணினியின் இலக்கணத்துடன் நாம் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக அது நம்மைத் தவிர்க்கிறது" என்றும் ராஜ்போபட் தெரிவித்துள்ளார்.


பாணினியின் மொழி:


ராஜ்போபாட்டின் கண்டுபிடிப்பு, பாணினியின் மொழி இயந்திரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு சமஸ்கிருத வார்த்தையிலிருந்தும் மில்லியன் கணக்கான சரியான இலக்கணச் சொற்களை உருவாக்க உதவுகிறது. இது வரலாற்றில் மிகப்பெரிய அறிவுசார் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


சமஸ்கிருதம் தெற்காசிய பண்டைய மொழிகளுள் ஒன்று. பாரம்பரிய இந்தோ-ஐரோப்பிய மொழியான சமஸ்கிருதம் இந்தியாவில் சுமார் 25,000 நபர்களால் மட்டுமே பேசப்படுவதாகவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.