ஆப்கானிஸ்தானில் ஜெபக் மாவட்டத்தில் உள்ள டோப்கானா பகுதியில் உள்ள உயரமான மலைப் பகுதியில், விமானம் விழுந்து நொறுங்கியதாக அம்மாகாண காவல்துறை தெரிவித்தது. பதக்‌ஷன் மாகணத்திற்குள் உள்ள மலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம், நேற்று இரவு ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்ததாகவும், இந்நிலையில் தான் அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. அதில் இந்திய பயணிகள் பலர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.






 


பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பாக தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்தும் இதுவரை எதுவும் தெரியவில்லை.






மத்திய அரசு மறுப்பு:


இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விபத்தில் சிக்கியது இந்திய விமானம் கிடையாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விமான விபத்து இந்தியாவைச் சேர்ந்த திட்டமிடப்பட்ட விமானமோ அல்லது திட்டமிடப்படாத (NSOP)/ தனியார் விமானமோ கிடையாது. அது மொராக்கோ நாட்டில் பதிவு செய்யப்பட்ட சிறிய விமானம். விபத்து தொடர்பான கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.