ஆப்பிள் வாட்ச் பல சந்தர்ப்பங்களில் உயிரை காக்கும் சாதனமாக இருக்கிறது. தற்போது மீண்டும் ஒரு முறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது.


இதயத் துடிப்பு, ஈசிஜி மற்றும் பலவற்றை அளவிடும் சென்சார்களைப் பயன்படுத்தி, பயனர்களின் ஆரோக்கியத்தில் உள்ள அசாதாரணங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையினைக்  கண்டறிந்து, உயிர்களைக் காப்பாற்றியது பற்றி பல சம்பவங்கள்  இதற்கு முன்னர் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் நடந்துள்ளது. இது குறித்து “digitalmofo” என்ற கணக்கைக் கொண்ட பயனர் ரெட்டி என்ற சமூக வலைதளத்தில் எழுதியுள்ளார். அதற்கு என் ஆப்பிள் வாட்ச் 7 என் உயிரைக் காப்பாற்றியது என்று தலைப்பிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் அவர் விரிவாகக் கூறியுள்ளதாவது: நான் எனது ஐபோன் வாட்ச்சை அன்று அதிக வேலை இருந்ததால் டிஎன்டி (அதாவது டூ நாட் டிஸ்டர்ப்) மோடில் போட்டிருந்தேன். உணவு இடைவேளையின் போது சாப்பிடச் சென்ற நான் கண் அசந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தால் என் வாட்ச்சில் 10 நோடிபிகேஷன் அத்தனையும் என் பல்ஸ் ரேட்டில் மாற்றமுள்ளதாக எச்சரித்திருந்தது. நான் சரியென்று மீண்டும் சிறிது ஓய்வுக்குச் சென்றேன். 


ஆனால் அதன்பின்னர் அவ்வாறே எச்சரிக்கைகள் வந்திருந்தன. அதனால் நான் எனது மருத்துவருடன் வீடியோ காலில் பேசினேன். அவர் சில வைட்டல் பாராமீட்டர் பற்றி கேள்விகள் கேட்டார். அதன் பின்னர் ஆக்சிஜன் லெவலை வாட்ச் கொண்டே சோதிக்கச் சொன்னார். பின்னர் உடனே 911 ஐ அழைக்கச் சொன்னார். சிறிது நேரத்தில் நான் மருத்துவமனையில் இருந்தேன். 


அங்கே எனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது உறுதியானது. பின்னர் எனக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதனால் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவின் கீழ் நிறைய பேர் அவர் நலம் பெற வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 


அண்மை ரிலீஸ்:


எல்லா வருடமும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் வெளியிடுவது வழக்கம்.  அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு ஸ்மார்ட் வாட்ச் என்றால் இவ்வளவுதான் இருக்கும் என்ற நிலையை மாற்றும் வகையில் பல மேம்பட்ட அம்சங்களோடு ஆப்பிள் வாட்ச் இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. இந்த புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஆனது உடல் வெப்பநிலை கண்காணிப்பு, பெண்களின் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, பிரத்யேக வாகன ஓட்டுதல் பாதுகாப்பு கண்காணிப்பு என பல அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் இன் ஜிபிஎஸ் பதிப்பு ரூ.31,783 எனவும் செல்லுலார் பதிப்பு தோராயமாக ரூ.39,749 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறை ஆப்பிள் வாட்ச் வெளியாகும்போதும் அதில் புதிய புதிய அம்சங்கள் கொண்டுவரப் படுகின்றன. அதற்கேற்றாற்போல் அதன் விலையும் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.