திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகர வீதியில் இந்திய குடும்பத்தினர் பாடலை இசைக்கவிட்டு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நமது நாட்டில் திருமணம் என்பது கொண்டாட்டமான நிகழ்வாகும். தென்னிந்தியாவாக இருந்தாலும் சரி, வட இந்தியாவாக இருந்தாலும் சரி திருமண நிகழ்வில் ஆடலும் பாடலும் நிறைந்து குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். வட இந்தியாவில் 4 நாட்களுக்கு மேலாகக் கூட திருமண வைபவம் அரங்கேறும். இந்தியர்கள் எங்கே இருந்தாலும் திருமணம் போன்ற நிகழ்வை வெகுச் சிறப்பாக கொண்டாடி விடுவார்கள்.


அந்த வகையில் அமெரிக்காவின் முக்கியமான நகரமான நியூயார்க்கை அதிர விட்டுள்ளனர் அமெரிக்கவாழ் இந்திய குடும்பத்தினர்.


"எனது சகோதரரின் திருமணத்திற்காக நகர வீதியை மூடினோம்" என்று எழுதி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சூரஜ் படேல் என்பவர் பகிர்ந்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவரான சூரஜ் படேல் எழுதிய பதிவில், "எனது மனம் நிறைவாக உள்ளது. எனது சகோதரரின் திருமணத்திற்காக எனது குடும்பத்தினர் நியூயார்க் நகர வீதியில் இருப்பதால் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


அந்த வீடியோ சமூக வலைத்தளஙகளில் வைரலாகி வருகிறது. 


எதிர்ப்பு


ஒருபக்கம் வெளிநாடுவாழ் இந்தியர்களின் கொண்டாட்ட வீடியோ வைரலாகி வந்தாலும், இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது.


அவர் பதிவேற்றம் செய்த வீடியோவுக்குக் கீழே இன்ஸ்டாகிராம் பயனர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளனர். "நியூயார்க் நகர வீதியை தனிப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது பிறருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தாதா? "ஷட்டவுன்" என்ற வார்த்தையைவிட, நியூயார்க் வீதியில் நடந்தேறிய இந்தக் கொண்டாட்ட நிகழ்வே தீங்கை விளைவிப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு பயனர் வெளியிட்ட பதிவில், "ஆம்புலன்ஸ் செல்வதற்கும், தேர்வு எழுத செல்பவர்களுக்கும், பணிக்குச் செல்பவர்களுக்கும் இந்தக் கொண்டாட்டம் காரணமாக கால தாமதம் ஏற்பட்டிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.