INDIA US Trade: இந்தியா இறங்கி வந்து அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என, அந்நாட்டின் வணிக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஆணவப் பேச்சு

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என வலியுறுத்தி தீவிரமான வரி விதித்த, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியக்கூடாது என இந்தியா நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள சில மாதங்களில் அவர்கள் மீண்டும் வருவார்கள் என அந்நாட்டின் வணிக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் பேசியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ ஒன்று அல்லது இரண்டு மாதங்களில், இந்தியா மீண்டும் எங்களிடம் வரும், மன்னிப்பு கோரும், ட்ரம்பிடம் ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிகளை எடுக்கும் என நான் நினைக்கிறேன்” என லுட்னிக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு வார்னிங்

தொடர்ந்து பேசுகையில், அமெரிக்காவிற்கு இந்தியா ஒத்துழைக்காவிட்டால், அங்கிருந்து வரும் ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி கட்டியே தீர வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், ”மிகப்பெரிய வாடிக்கையாளருடன் சண்டையிடுவது நன்றாக இருக்கிறது. இது பெரிய துணிச்சல் தான். ஆனால் இறுதியில், வணிகங்கள் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தைக் கோரும்" என்று லுட்னிக் இந்தியாவை விமர்சித்துள்ளார்.

”அமெரிக்காவின் நிபந்தனைகள்

வரிகளைத் தவிர்ப்பதற்கான முன்நிபந்தனைகளை குறிப்பிட்டு பேசும்போது, "இந்தியா தனது சந்தையை அமெரிக்க பொருட்களுக்காக திறக்கவோ, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவோ, பிரிக்ஸின் ஒரு பகுதியாக இருப்பதை நிறுத்தவோ விரும்பவில்லை. நீங்கள் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே பாலமாக இருக்க விரும்பினால், அப்படியே இருங்கள். ஆனால் டாலரை ஆதரிக்கவும், அமெரிக்காவை ஆதரிக்கவும், உங்கள் மிகப்பெரிய வாடிக்கையாளரை ஆதரிக்கவும், அல்லது 50% வரிகளை செலுத்தவும், இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பார்ப்போம்.

ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருப்பதால், அவர்களுடைய கச்சா எண்ணெய் உண்மையிலேயே மிகவும் மலிவானத. ரஷ்யர்கள் அதை வாங்க ஆட்களைத் தேடும் நிலையில் இந்தியர்கள் அதனை வாங்க முடிவு செய்துள்ளனர், அதை மலிவாக வாங்கி நிறைய பணம் சம்பாதிப்போம்' என முடிவு செய்துள்ளனர்” என லுட்னிக் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமனிற்கு பதிலடியா?

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை குறிப்பிட்டு, ரஷ்யா மற்றும் இந்தியாவை இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரஷ்ய எண்ணெயாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி, விலை, தளவாடங்கள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, நமது தேவைகளுக்கு எது பொருத்தமானது என்பதைப் பொறுத்து நாங்கள் முடிவெடுப்போம். எனவே, நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ரஷ்ய எண்ணெயை வாங்குவோம்” என தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தான், இந்தியா மன்னிப்பு கேட்டு அமெரிக்காவிடம் ஒப்பந்தம் மேற்கொள்ள இறங்கி வரும் என, அந்நாட்டின் வணிக அமைச்சர் லுட்னிக் பேசியதாக கருதப்படுகிறது.